Tuesday, October 20, 2009

உன்னைப்போல் ஒருவன் திரைப்படம் உருவாக்கிய காயங்கள்


தமிழ்ப்படங்களில் சமூக சிந்தனையைத் தூண்டுகிற நல்ல படங்களும் உண்டு என்று சொல்லும் அளவுக்கு அபத்தக் களஞ்சியமாகத் திரைப்பட உலகம் திகழ்கிறது.

திரைப்படங்களும், அதைச் சார்ந்து இயங்குகின்ற சின்னத்திரை அலைவரிசைகளும் பொதுமக்களின் உள்ளங்களில் மிக ஆழமானத் தாக்கத்தை உண்டாக்குகின்றன.

தமிழ்நாட்டில் சினிமா பார்க்காதவர்களும் உண்டு என்று சொல்லும் அளவுக்கு மக்களின் நிலை உள்ளது.

சினிமாக்கூடத்தைத் தேடிப் போகாவிடிலும், சினிமா நம் வீட்டுக் கூடத்திற்கே அலைவரிசையாய் நுழைகிறது. மனதை ஊடுருவித் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.
1990க்குப் பிறகு வந்த திரைப்படங்கள் முஸ்லிம்களைக் கொச்சையாக சித்தரிக்கும் பணியைச் செய்து வருகின்றன. எம்.ஜி.ஆர்., சிவாஜி படங்களில் முஸ்லிம்களை நல்லவர்களாக காட்டுவதுண்டு. ஆயினும் 'நம்பல்க்கி நிம்பல் தர்ரான்' என்பதுபோல அந்நியத் தமிழ் பேசுபவர்களாக முஸ்லிம்களைக் காட்டுவார்கள்.

கமல், ரஜினி படங்கள் சிலவற்றிலும் முஸ்லிம் பாத்திரங்கள் நன்றாகக் காட்டப்பட்டதுண்டு. ரோஜா படத்தில் மணிரத்னம் தொடங்கிவைத்த சினிமா வன்முறை பலராலும் பின்பற்றப்பட்டு விஜயகாந்த், அர்ஜுன் போன்ற தேசபக்தி (?) நடிகர்களால் மென்மேலும் வளர்த்தெடுக்கப்பட்டது.

கோவில்களை குண்டுவைத்து தகர்க்க முஸ்லிம் தீவிரவாதிகள்(?) திட்டம் போடுவது போலவும், உள்ளூரில் முஸ்லிம் இளைஞர்கள் அதற்கு உதவுவது போலவும், தீவிரவாதிகளை கதாநாயகன் தீர்த்துக்கட்டி உள்ளூர் முஸ்லிம் இளைஞர்களுக்கு தேசபக்தியையும், இந்தியாவின் பெருமையையும் உபதேசம் செய்து அவர்களை நல்ல இந்தியர்களாக மாற்றுவது போலவும் படங்கள் எடுக்கப்பட்டன.

நரசிம்மா என்ற படத்தில் விஜயகாந்த், 'இந்தியாவில் முஸ்லிம், கிரிக்கெட் கேப்டனாக (அசாருதீன்), மாநில ஆளுநராக (பாத்திமா பீவி) வரமுடியும்; பாகிஸ்தானில் ஒரு இந்து வார்டு கவுன்சிலராகக் கூட வரமுடியாது'' என்று தேசபக்தி வசனம் பேசுவார்.

மதவெறி ததும்பும் இதுபோன்ற அபத்தங்களை பல நடிகர்கள் வசனமாகப் பேசினாலும், பெரிய நடிகர்களான கமல்ஹாசன், ரஜினிகாந்த் படங்களில் இவ்வாறான அபத்தங்கள் இடம்பெறவில்லை. (அதற்காக வேறுவகையான அபத்தங்களும், ஆபாசங்களும் இல்லையென்று அர்த்தமில்லை).

ஜக்குபாய் என்ற ரஜினி படத்தின் விளம்பரம் முஸ்லிம்களைக் கொச்சைப்படுத்துவது போல இருந்ததற்கு தமுமுக கடும் எதிர்ப்பு தெரிவித்தது. பிறகு அந்தப் படமே கைவிடப்பட்டது.

50 ஆண்டுகள் திரைப்பட உலகில் தொடர்ந்து வெற்றிபெற்ற(?) கமல்ஹாசன் போன்ற திரைப்பட மேதை, 'உன்னைப்போல் ஒருவன்' படத்தை தயாரித்திருப்பது அதிர்ச்சிக்குரியது.

குண்டுவெடிப்பு நடத்திய முஸ்லிம் தீவிரவாதிகளை(?) ஒரு பொது மனிதன், போலீசை மிரட்டி விடுவிக்கிறான். பிறகு அவர்களை குண்டுவைத்துக் கொல்கிறான். பெயரில்லாத அந்த மனிதன் யார் என தெரிந்தபிறகும் காவல்துறை ஆணையர் அவனைக் கண்டுகொள்ளாமல் கைகுலுக்கி அனுப்புகிறார். பிறகு பெருமிதத்துடன் அவனைப் பற்றிய நினைவுகளை அசைபோடுகிறார். இதுதான் உன்னைப்போல் ஒருவன் என்ற ஒன்றரை மணி நேரப் படத்தின் கதை.

சம்பவங்கள் எல்லாம் தமிழகத்தில், அதுவும் சென்னையில் நடக்கின்றன.

+ தீவிரவாதிகள் அனைவரும் முஸ்லிம் இளைஞர்களாகவும், குண்டு வைப்பவர்களாகவும் காட்டப்பட்டுள்ளது. ஒருவர் மட்டும் இந்து, அவர் வெடிமருந்து வியாபாரி.
+ தீவிரவாதிகள் அனைவரும் உருது மொழிதான் பேசுகிறார்கள்.

+ அல்காயிதா, ஹிஸ்புல் முஜாஹிதீன், ஹமாஸ், ஜமாஅத்துத் தஃவா என ஒன்றுக்கொன்று சம்பந்தமில்லாத இயக்கங்கள் தமிழகத்தில் ஒரு குடையின் கீழ் இயங்குவதாகவும், இதைக் கண்டு அந்தப் பொதுமனிதன் பொங்கி எழுவதாகவும் காட்டப்பட்டுள்ளது.

கோவை குண்டுவெடிப்பு சம்பவத்தில் ஏராளமான அப்பாவிகள் கைது செய்யப்பட்டு, கொடுஞ்சிறையில் இளமையை இழந்து, மெல்ல நீதியின் வெளிச்சம் பட்டு அப்பாவிகள் விடுதலையாகிவரும் வேளையில், இப்படி ஒரு படம் தமிழக மக்களின் மனதைக் குழப்பியுள்ளது.

சிறையில் ஆயிரக்கணக்கான குற்றவாளிகள் இருக்கும் போது, ஏன் நான்கு பேரை மட்டும் தேர்ந்தெடுத்தாய் என்று அந்தப் படத்தில் பொது மனிதனிடம் கேட்கப்படுகிறது. சீட்டுக் குலுக்கிப் போட்டு தேர்ந்தெடுத்ததாக பதில் வருகிறது.
கைது செய்யப்பட்ட அனைவருமே குற்றவாளிகள்தான் என்ற கருத்தை இப்படம் விதைக்கிறது.

முஸ்லிம் என்றால் விசாரணை இல்லாமல் கொன்றுவிட வேண்டும் என்ற மோடி கும்பலின் மூர்க்க சிந்தனை இப்படத்தில் வெளிப்படுகிறது. காவல்துறைக்கு வரம்பற்ற அதிகாரம் வலியுறுத்தப்படுகிறது. ஆரிஃப், கரீம், ஸகரிய்யா போன்ற நல்ல முஸ்லிம் பாத்திரங்களும் காட்டப்படுகின்றன.

இது ஒருவகையான ஊடக வன்முறை.

+ குஜராத்தில் பல்லாயிரம் முஸ்லிம்களைப் படுகொலை செய்தவர்கள்,

+ பம்பாய், மீரட், முராதாபாத், பீவண்டி, பாகல்பூர் போன்ற இடங்களில் முஸ்லிம்களைக் கொலை செய்தவர்கள்,

+ பெண்களை மானபங்கம் செய்து அதை வீடியோவில் பதிவு செய்து பார்த்துக் களித்தவர்கள்,

+ பசு மாட்டின் தோலைக் கையில் வைத்திருந்ததற்காக ஹரியானாவில் ஐந்து தலித் இளைஞர்களை அடித்தே கொன்றவர்கள்,

+ திண்ணியத்தில் தலித்களை மலம் தின்னவைத்தக் கொடியவர்கள்,

இவர்களுக்கெதிராகவெல்லாம் அந்தப் பொது மனிதன் பொங்கி எழவில்லை. ஏனென்றால், அவன் பொது மனிதனில்லை, மத மனிதன். அவனுக்கு முஸ்லிம் குற்றவாளிகள் மட்டுமே தெரிகிறார்கள்.

ஷங்கரின் அந்நியன், கமலின் பொது மனிதன், சுசி கணேசனின் கந்தசாமி, இதர இதுபோன்ற பாத்திரங்கள் யாவுமே உயர்சாதி அடையாளங்களோடே அவதரிக்கின்றன.

திரைப்படத் துறையில் இருப்பவர்கள் தமக்கு நிகழ்த்தப்படும் அநீதிகளைக் கூட சரியாகவும், கூர்மையாகவும், காலத்தோடும் புரிந்து கொள்ளத் தெரியாத பெரும்பான்மையினரைக் கொண்ட சிறுபான்மை முஸ்லிம்களைத் தொடர்ந்து கொச்சைப்படுத்துவது கொடுமையானது.

'நான் என்ன ஆயுதம் எடுக்கவேண்டும் என்பதை எதிரிதான் தீர்மானிக்கிறான்'' என்றார் மாவோ. ஊடகத் துறையில் கருத்தியல் வன்முறைகளை எதிர்கொள்ள, பாதிக்கப்பட்ட சமுதாயங்கள் தயாராக வேண்டும் என்பதைத்தான் இன்றைய காலக்கட்டம் அழுத்தமாக உணர்த்துகிறது.