Friday, June 12, 2009

(இட்லி) வடையில் பிளேடு: பஞ்சாபிகாரரின் வாயை பதம் பார்த்தது.


பஞ்சாப் மாநிலத்தில் இருந்து தமிழகம் சுற்றுலா வந்திருக்கிறார் வினய்குமார் என்ற பஞ்ஞாபி. சென்ரல் ரயில்வே நிலையம் அருகே ஒரு கடையில் வடையை பார்சல் வாங்கி மனுசன் கொஞ்சம் லேட்டா சாப்பிட்டு இருக்கிறார். சாப்பிட்டு கொஞ்ச நேரத்தில் வாயில் இரத்தம் கொட்ட ஆரம்பித்திருக்கிறது. உடனே மனுசன் தலை தெறிக்க பக்கத்தில் இருந்த சென்ரல் அரசு மருத்துவமனைக்கு மருத்துவர்களிடம் காட்டியிருக்கிறார். பின்னர் தான்னுடைய வாயை மருத்துவரிடம் காட்ட பல்லிடுக்கில் பிளேடு துண்டு ஒன்றை கண்டு பிடித்திருக்கிறார்கள்.


எனக்கென்னமோ இட்லி வடை தான் இதை செய்திருப்பார் என்று தோன்றுகிறது.


அடுத்தபடியாக ஸ்குரு, நட்டு, போல்டு, குண்டுசி, ஆணி போன்ற வற்றை போட்டால் இன்னும் கொஞ்சம் வியாபாரம் ஆகலாம்.

Wednesday, June 10, 2009

அம்மா குஞ்சு மணி வெளியில வந்துடுச்சு என்ன செய்ய?


எனக்கு சுன்னத் பண்ணும் போது 10 வயதாகி விட்டது. என்னுடன் சேர்த்து என் தம்பி மற்றும் பெரியம்மா பசங்க என்று மொத்தம் 4 பேர்களுக்கு செய்தார்கள். வயதில் மூத்தவன் என்கிற அடிப்படையில் எனக்கு தான் முதலில் நறுக் செய்திட வேண்டும். ஆகவே பயம் எனக்கு கொஞ்சம் ஓவராக இருந்தது. இப்போதெல்லாம் ஆயிரம் ரூபாயை வாங்கிக் கொண்டு 10 நிமிடத்தில் 4 பேருக்கு டாக்டர்களே செய்து விடுகிறார்கள். ஆனால் எனக்கு நறுக் செய்திட்டவரோ நாசுவன் என்று அழைக்கப் படக் கூடிய நாவித மருத்துவர். ஆகையால் மயக்க மருந்து ஏதுமின்றி உரலின் நடுமைய மாக உட்கார வைத்து விட்டு, வயதுக்கு வந்த ஆண் மக்கள் சூழ ஒரு சிறிய கத்திரி மற்றும் கத்தியை மட்டும் வைத்து காரியத்தை முடித்திருவார். இவரிடம் தான் நான் பிறந்தில் இருந்து 15 வருடமாக முடியும் வெட்டிக் கொண்டேன். சில நேரங்களில் கடனுக்கு கூட. இவர் கிட்ட போனாலே சுருட்டு வாசம் ஆளை தூக்கும். இவர் முடி திருத்தும் கடை பக்கம் போனல் சில சமயம் மாப்ளே. இங்கே வாடா, அப்பாவிற்கு (தாத்தாவிற்கு) மயில் மார்க் சுருட்டு வாங்கியாடான்னு சொல்வாரு. நானும் தட்டாமல் வாங்கியும் கொடுத்திருக்கேன்.


எனக்கு 10 நாட்களுக்கு முன்னரே எனது கெழுதகை நண்பன் ஹைதர் அலி கத்னா வைபவம் வெகு சிறப்பாக நடைபெற்றது. அவர் சீனியர் ஆகிவிட்டதால வெட்கத்தை விட்டு போய் ரெம்ப வலிக்குமாடான்னு கேட்டேன். ஆமாம், உயிரே போயிடும்னு சொன்னான். சரியாப் போச்சு. சும்மாவே பயமா இருந்து எனக்கு எங்க உசுரு போயிடுமோன்னு ரெம்பவே பயம். பின்னே யாருக்கு தான் உசுரு மேல ஆசை இருக்காது. பின்னாடி வாப்பாட்ட போயி ஒரே ஒப்பாரி. ஊகூம் மனுசன் அசரவே இல்லை. பத்திரிக்கையெல்லாம் அடிச்சாச்சு, ஊரை எல்லாம் கூப்பிட்டாச்சு. கழுதை வயசாகுது இப்ப பண்ணல்லைன்னா வேற எப்ப பண்றது. இங்க பாரு உன் தம்பி எவ்வளவு தைரியமாக இருக்கான். அவன் மூத்திரத்தை வாங்கி குடிடான்னு வேற சொல்லிட்டாரு. நம்மளை கொல்லுறதுக்கு ஏதொ சதி நடக்குதுன்னு நெனைப்பில்ல நான் பாட்டுக்கு ஏதாவது செய்து இதை உடனே தடுத்தாகனும்னு ராத்திரி பூராவும் மூளையை போட்டு கசக்கி பார்த்தாலும் ஒரு ஐடியாவும் கிடைக்கவில்லை. ராத்திரி கனவுள்ள நாசுவரு கத்திரி, கத்தியோட வந்து மிரட்டி விட்டு போனது தான் மிச்சம்.


மறுநாள் என் தம்பிட்ட ஏன்டா உனக்கு பயமாக இல்லையாடான்னு கேட்டேன். பய நம்மள்ள விட புத்திசாலி. அதான் உனக்கு தான்னே முதல்ல பண்ணுறாங்கன்னு சொல்ல நாசுவரை விட இவன் தான் எனக்கு பெரிய எதிரியாக தெரிந்தான்.


கடைசியில்ல கத்னா செய்ய வேண்டிய நாளும் வந்தது. ஊரையே கூப்பிட்டு கறி சோறு போட்டு கத்னா செய்வது என்றால் சும்மாவா காலையிலேயெ இரண்டு கிடாவை வெட்டி கறி குழும்பின் வாசனை ஊரையெ தூக்கியது. முதல் சாப்பாடு சுன்னத் கல்யாண மாப்பிள்ளைகளுக்கு தான் கொடுக்க வேண்டும் என்று ஏதெனும் எழுதப் படாத சட்டம் இருக்கும் போல. எங்கள் நான்கு பெயர்களுக்கு தான் முதல் சாப்பாடு வைத்தார்கள். ஆனால் ஒரு பயலுக்கும் உள்ள இறங்கள.


அப்போ தான் நம்ம வில்லன் வந்தாரு. எனக்கு தான் இவரை பொறந்ததில் இருந்து தெரியுமே. இவரோட மனைவி தான் எனக்கு பிரசவம் பார்த்தவங்களாம். இவ்வளவு ஏன் எங்க குடும்பத்துள்ள பாதி பெயருக்க இவங்க மனைவி தான் பிரசவம் பார்த்தாகவும் தெரிந்து கொண்டேன். இதுள்ள இன்னொரு வரலாற்று பூர்வமான தகவலும் எனக்கு கிடைத்தது. அது என்னவென்றால் இவரு தான் எனக்கு முதன் முதல மொட்டை போட்ட மவராசன் என்கிற சேதி. இது மட்டுமில்லாமல் என்னோட வாப்பா, மாமா, சின்னவாப்பா என்று ஊருள்ள உள்ள ஆண் மகவுகள் பாதி பெயர்களுக்கு இவர் தான் நறுக் செய்து விட்டவர். இந்த அறிமுகப் படலம் முடிந்ததும். நாவிதர் என் தம்பியை பார்த்து மாப்ளே... உனக்கு தான் முதல்ல வெட்டப் போறென் என்றார். ஊம் காக்கா (அண்ணன்) இருக்கானுள்ள என்று என்னோட வாப்பாவின் மடியில் ஏறி அமர்ந்து கொண்டான்.


நேரம் தேய தேய எனக்குள் பயமும் அதிகமாகியிருச்சு. எங்கள் நான்கு பேரையும் ஊர்வலமாக அழைத்துக் கொண்டு போயி பள்ளிவாசலில் துஆ ஓதினார்கள். பின்னர் நான் அணிந்திருந்த புது துணியை கழற்றி விட்டு ஒரு வெள்ளை துண்டை சுற்றி உரலில் நடு மையமாக உட்கார வைக்கவும் அழுகை பீறிட்டு வந்தது. பயத்தில் கையையும், காலையும் உதற ஆரம்பித்து விட்டேன். என் கையையும் காலையும் இறுக்கமாக நான்கு பேர்கள் பிடித்துக் கொண்டார்கள். சிறிது நேரத்தில் மயக்கமாகி விட்டேன். பின்னர் என்ன நடந்தது என்றே தெரியவில்லை. எழுந்து பார்த்தால் எல்லாம் முடிந்து விட்டது.


நாங்கள் நான்கு பேரும் வரிசையாக படுக்க வைக்கப்பட்டு தொட்டி மாதிரி வெள்ளைத் துணியில் தொட்டில் போன்று கட்டி நறுக் செய்யப் பட்ட இடத்தில் எதுவும் பட்டு விடக் கூடாது என்கிற முன்னேச்சரிக்கை ஏற்பாடாக படற விட்டிருந்தார்கள். என் தம்பி மட்டும் இன்னும் அழுது கொண்டிருந்தான். உம்மா தான் அவளை எல்லாம் முடிந்திருச்சு காலையில்ல எல்லாம் சரியாகிடும்னு அவளை ஆறுதல் படுத்திக் கொண்டிருந்தார்.நறுக் பண்ணிய இடத்தை சுற்றி வெள்ளை துணியால் மருந்திட்டு கட்டியிருந்தார்கள். சிறிறு மஞ்சள் நிறமும். சிகப்பு சிறமுமாக அவ்விடம் காட்சி தந்தது. முதல் நாள் மட்டும் சிறுநீர் கழிக்க சற்று சிறிது கஷ்டமாக இருந்தது. மறுநாள் சரியாகி விட்டது.


நறுக் செய்து ஏழு நாட்கள் ஆகி விட்டது. நறுக் செய்து சரியாக ஏழாம் நாளன்று கட்டை பிரிப்பார்கள். அதற்கு முந்தைய இரவே கட்டை சுலபமாக பிரிப்பதற்காக தேங்காய் எண்ணையில் காயத்தை நன்றாக ஊற வைத்திடுவார்கள். எனது கெழுதகை நண்பன் ஹைதர் அலி வந்து அடுத்து குண்டை தூக்கி போட்டான். மச்சான்அன்னைக்கு சொன்னேன்னுள்ளடா உயிரே போயிடும்னு அது இன்னைக்கு தான். இன்னைக்கு தான் கட்டை பிரிப்பாங்கள் என்று பீதியை கிளப்பி விட்டு போனான். ஏழு நாளைக்கு பின்னாடி பயம் அடி வயித்தை புரட்டியது. குளிப்பாட்டுவதற்கு நாவிதரும் வர குளிப்பாட்டும் படலம் ஆரம்பமானது. எனக்கு குளிக்கும் போதெ கட்டு அவிழந்து போனது. ஆனால் என் தம்பிக்கு தான் கட்டை பிரிப்பதற்கு நாவிதர் பெரும் பாடு பட்டு விட்டார். அந்த ஏழு நாட்களுக்கு பின்னர் நாங்கள் நால்வரும் நிர்வாண நிலையில் இருந்து கைலிக்கு மாறினோம். கைலி நறுக் செய்யப் பட்ட இடத்தில் படும் போடிதல்லாம் கூசும். அதனால ஒரு வாரத்திற்கு கைலியை தூக்கி பிடித்த படியே நடக்க வேண்டும்.


சரித்திரத்தில் மறைக்கப்பட்ட இந்த சம்பவங்கள் நடந்து சுமார் 12 வருடங்கள் ஆகி விட்டது. இன்னைக்கு யாரும் நாவிதரை கூப்பிட்டு நறுக் செய்வதில்லை. நேராக டாக்டரிடம் போய் விடுகிறார்கள். அன்று எனக்கு நறுக் செய்தவர் இன்று ரிட்டையர்டு ஆகி விட்டார் என்று கூற முடியாது. ஆனால் அவர் வயதாகி போனதால்ல யாருக்கும் சுன்னத் செய்வதில்லை என்றும் கூறிக் கொள்கிறார். ஆனால் மயில் மார்க் சுருட்டை மட்டும் விட்ட பாடில்லை.

-----------

  • நறுக் செய்து கொள்வதால் பல்வேறு மருத்துவ பயன்கள் இருப்பதால் முஸ்லிம் அல்லாத டாக்டர்களும் விஞ்ஞானிகளும் நறுக் செய்து கொள்கிறார்கள்.
  • எனக்கு தெரிந்து எழுத்தாளர் சாரு நிவேநிதா கூட நறுக் செய்து கொண்டாதாக தெரிகிறது.
  • நறுக் செய்த அடையாளத்தை வைத்தே குஜராத் இன படுகொலையின் போது பல முஸ்லிம்கள் கொல்லப் பட்டிருக்கிறார்கள்.
  • ஆளவந்தான் திரைப்படத்தில் கூட நறுக் செய்த அடையாளத்தை கொண்டே கமல் ஹாசனா அல்லது ரியாஸா என்று கண்டு பிடிக்கும் காட்சி இடம் பெற்றிருக்கும்.
  • எழுத்தாளர் சுஜதா ஏன்? எதற்கு? எப்படி? முதல் பாகத்தில் கூட நறுக் செய்வதை விரிவாக எழுதியிருக்கிறார்.


------------------------------------------------------------------------------------------சுன்னத், சின்னத், சுன்னத் கல்யாணம், கத்னா என்றெல்லாம் அழைக்கப்படும் ஒரு பழக்கம் ஆண்குறியின் முன் தோலை அகற்றுவதாகும். இது யூதர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் சமயம் சார்ந்த ஒரு பழக்கமாக இருக்கிறது. ஆங்கிலத்தில் இதை சர்கம்சிஷன் (Circumcision) என்று சொல்கிறார்கள்.
ஆனால் யூதர்களும் முஸ்லிம்களுக்கும் மட்டும்தான் இந்த பழக்கம் இருக்கிறது என்று சொல்ல முடியாது. பயன் அல்லது அவசியம் கருதி இதை செய்துகொள்ளும் மற்ற மதத்தினரும் உண்டு.

ஆனால் இதுகாறும் சமயம் சம்பந்தப்பட்ட விஷயமாக பார்க்கப்பட்ட ஒன்றுக்கு இப்போது விஞ்ஞானத்தின் ஆதரவு கிடைத்துள்ளது. அதுவும் மனித உயிரைக் கொல்லும் எய்ட்ஸ் என்னும் நோயிலிருந்து காப்பாற்றும் ஆற்றல் கொண்ட செயலாக இந்த 'சர்கம்சிஷன்' உள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ஹெச்.ஐ.வி. தொற்றும் வாய்ப்பை இது குறைப்பதாக ஆராய்ச்சிகளின் மூலம் கண்டறிந்துள்ளனர். சமீபத்தில் அமெரிக்காவின் டொராண்டோவில் (Toronto) நடந்த சர்வதேச எய்ட்ஸ் கலந்தாய்வுக் கூட்டத்தில் ஹெச்.ஐ.வி. தொற்றுவதிலிருந்து நம்மைத் தடுக்கும் மிகச்சிறந்த வழியாக சர்கம்சிஷன் இருப்பதாக தான் நம்புவதாக முன்னால் ஜனாதிபதி பில் கிளிண்டன் கூறினார். இதை மதரீதியானதாகப் பார்க்கக் கூடாது என்றும் அவர் உலக நாடுகளைக் கேட்டுக்கொண்டார்.

"பரிசோதனைகளுக்கு நல்ல பயன்கள் கிடைத்திருக்கும் பட்சத்தில், இந்நோயைத் தடுக்கும், மனித உயிர்களைக் காக்கும் ஆற்றல் மிகுந்த வழி காணப்பட்டுவிட்டது என்றே பொருள். நாம் அனைவரும் இங்கிருந்து போகும்போது இந்த முறைக்கு பச்சைக்கொடி காட்டியவர்களாக வெளியே செல்ல வேண்டும்" என்று அவர் கூறினார்.

"சர்கம்சிஷன் செய்து கொள்வதனால் முறையற்ற பாலியல் உற்வுகளால் விளையும் பல நோய்கள் தடுக்கப்படுகின்றன. ஆண்களுக்கு ஆண்குறியைப் பாதிக்கும் புற்று நோயும் (penile cancer), பெண்களுக்கு கழுத்துப் பகுதியில் பாதிக்கும் புற்றுநோயும் (cervical cancer) வராமல் தடுக்கப்படுகிறது. ஹெச்.ஐ.வி. தொற்றும் வாய்ப்பையும் எய்ட்ஸ் ஏற்படும் வாய்ப்பையும் இது கணிசமாக கட்டுப்படுத்துகிறது. ஆனால் இது எய்ட்ஸுக்கு எதிரான முழு பாதுகாப்புக் கேடயமல்ல" என்கிறார் இந்த சர்வதேச மாநாட்டில் கலந்து கொண்டிருக்கும் பிரபல டாக்டர் கம்பம்பட்டி ஸ்வயம் ப்ரகாஷ்.

தென்னாப்பிரிக்க மற்றும் ஃப்ரெஞ்சு நாட்டு விஞ்ஞானிகளின் சமீபத்திய ஆராய்ச்சிகளின் முடிவுகள்தான் இந்த விவாதத்தையே தொடங்கி வைத்தன என்று கூறலாம். சர்கம்சிஷன் செய்து கொண்ட ஆண்களில் 60 விழுக்காட்டுப் பேருக்கு ஹெச்.ஐ.வி. தொற்றும் அபாயம் குறைவாக இருப்பதாக அவர்கள் கண்டறிந்தார்கள்.

கென்யா, உகாண்டா ஆகிய நாடுகளிலும் இது தொடர்பான மூன்றுவிதமான ஆராய்ச்சிகள் நடந்துகொண்டிருப்பதாக உலகளாவிய ஹெச்.ஐ.வி. தடுப்புக் குழு (Global HIV Prevention Working Group) சமர்ப்பித்த அறிக்கை கூறுகிறது. சர்கம்சிஷன் செய்து கொண்டவர்களோடு சேர்ந்து வாழும் 7000 பெண்களுக்கு ஹெச்.ஐ.வி. தொற்றும் வாய்ப்பு குறைந்துள்ளதா என்று ஒரு ஆராய்ச்சி உகாண்டாவில் நடக்கிறது. இதன் முடிவுகள் அடுத்த ஆண்டு எதிர்பார்க்கப் படுகின்றன.

25-லிருந்து 50 பேர்களுக்கு ஹெச்.ஐ.வி. தொற்றுவதை சர்கம்சிஷன் தடுக்கிற்து என்று கூறுகிறார் பாலியல் மருத்துவர் ஜி.சாமரம். ஆரோக்கியமான உடலுறவே 60-லிருந்து 70 விழுக்காடு வரை இந்த நோய் பரவாமல் காப்பாற்றும் என்றும் அவர் கூறுகிறார்.

"ஒவ்வொரு உடலுறவுக்குப் பிறகும் மர்ம உறுப்புகளை சுத்தமாகக் கழுவ வேண்டும். நோய் பரப்பும் கிருமிகளிலிருந்து இது காப்பாற்றும். ஆண்குறியில் சர்கம்சிஷன் செய்துகொள்ளும்போது முன்தோல் வெட்டி எடுத்துவிடப்படுவதால், பாக்டீரியா,வைரஸ் போன்ற கிருமிகள் தொற்றுவதற்கு மிகக்குறைந்த வாய்ப்பே உள்ளது" என்றும் அவர் கூறினார்.

"சர்கம்சிஷன் இந்த நோயைக் குறைக்குமே தவிர, ஒழித்து விடும் என்ற் சொல்ல முடியாது. இதைச் செய்து கொண்டால் யாரிடம் வேண்டுமானாலும் (தகாத) உறவு வைத்துக் கொள்ளலாம் என்ற எண்ணமும் செய்து கொண்டவர்களுக்கு ஏற்படலாம். இது செக்ஸை சட்டபூர்வமாக்குவதைப் போன்றதாகிவிடும்" என்கிறார் ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள தவறான பாலியல் பயன்பாட்டுக்கு எதிரான குழுவுக்குத் தலைவராக இருக்கும் என்.வி.எஸ். ராம்மோகன்.

-- வெள்ளி, டெக்கன் க்ரானிக்கிள், ஆகஸ்ட் 18, 2006.
NANDRI: NAGORE RUMI.

Tuesday, June 9, 2009

வக்ஃபு வாரியத் தலைவராகிறார் கவிக்கோ அப்துல் ரகுமான்


தமிழ்நாடு வக்ஃபு வாரியத் தலைவர் பதவியை தமுமுக பொதுச் செயலாளர் செ. ஹைதர் அலி ராஜினாமா செய்த பிறகு அந்த பதவிக்குரிய இடம் தற்சமயம் காலியாகவே உள்ளது. இந்த நிலையில் நாடாளுமன்ற தேர்தலைச் சந்தித்த திமுக ஒரு சில முஸ்லிம் பிரமுகர்களுக்கு தேர்தலில் திமுகவிற்கு உங்களது விசுவாசத்தை காட்டுங்கள். பின்னர் வக்ஃபு வாரியத் தலைவர் பதவி உங்களை தேடி வரும் என்றனர்.


காதர் முகையதீனுக்கு எம்.பி சீட் இல்லை என்ற நிலை உருவான பின்னர் வக்ஃபு வாரியத் தலைவர் பதிவியை அவருக்கே கொடுக்கலாம் என்று ஒரு தரப்பு நம்பி வந்த நிலையில்.....


கவிக்கோ அப்துல் ரஹ்மான் வக்ஃபு வாரிய உறுப்பினராக நியமனம் செய்யப்பட்டார். அநேகமாக இன்னும் ஓரிரு தினங்களில் அறிவிப்புகள் வரும் என எதிர்பார்க்கப் படுகிறது.
கவிஞராகவும் கலைஞரின் மிகச் சிறந்த ஜால்ராவாகவும் பெயர் எடுத்த கவிக்கோ அப்துல் ரகுமான் என்ன செய்யப் போகிறார் என்று பொறுத்திருந்து பார்க்போம்.