Thursday, April 16, 2009

அத்வானி மீது ஷூ வீச்சு


போபால்: மத்திய பிரதேச மாநிலம் கட்னி தொகுதியில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுயிருந்த பா.ஜ., வேட்பாளர் அத்வானி மீது, ஒருவர் ஷூ வீசினார். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ஷூ வீசியவரை போலீசார் கைது செய்தனர்.

Wednesday, April 15, 2009

தேர்தல் களத்தில் அசத்தும் அசாருதீன்


இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் முஹம்மது அசாருதீன், காங்கிரஸ் கட்சியின் சார்பாக உத்தரப்பிரதேசத்தில் போட்டியிடுகிறார். ஆந்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த முஹம்மது அசாருதீன் ஹைதராபாத் தொகுதியில் அல்லது செகந்தராபாத் தொகுதியில் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அசாருதீன் எங்கள் மாநிலத்தில்தான் போட்டியிட வேண்டும் என பல்வேறு முனைகளிலிருந்தும் கோரிக்கைகள் வந்தன.

ராஜஸ்தான் மாநிலத்தில் போட்டியிட வேண்டும் என்றும் அங்குள்ள காங்கிரஸ்காரர்கள் விருப்பம் தெரிவித்தனர். இறுதியில் மாயாவதிலிமுலாயம் அதிரடி கோட்டையான உத்தரப்பிரதேசத்தில் முஸ்லிம்கள் கணிசமாக வாழும் மொராதாபாத்தில் அசார் களம் காண்கிறார்.

நான் உங்களுடனே எப்போதும் இருப்பேன் என்ற பொருளில் மிக நீண்ட இன்னிங்ஸில் இங்கு விளையாடுவேன் எனக் கூறியுள்ளார். நான் இப்போதே வெற்றி பெற்றுவிட்டதைப் போல் இருக்கிறது என பொதுமக்கள் கூறுகிறார்கள். ஆனால் நான் அவ்வாறு நினைக்கவில்லை. வெற்றி என்பது விளையாட்டில் கடைசி பந்து வீசப்பட்டு முடியும்வரை முடிவு தெரியாது என முஹம்மது அசாருதீன் தெரிவித்திருக்கிறார்.

46 வயதான முஹம்மது அசாருதீன் கிரிக்கெட் உலகின் நட்சத்திரமாகவே வலம் வந்தவர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. அவர் கிரிக்கெட் உலக பிரபலம். அது இவருக்கும் இவரது காங்கிரஸ் கட்சிக்கும் நன்றாகவே 'கை' கொடுக்கும் என நம்பிக்கை தெரிவிக்கிறார்கள்.

17 லட்சம் மக்களைக் கொண்ட மொராதாபாத் லி தாமிரம், அலுமினியம், இரும்பு மற்றும் கண்ணாடி தொழில்களுக்கு பிரசித்திப் பெற்றது. இத்தொகுதியில் கரும்பு விவசாயிகள் கணிசமாக வாழ்கின்றனர். உத்தரப்பிரதேசத்தைப் பொறுத்தவரையில் காங்கிரஸ் ஒரு செல்வாக்கு குறைந்த கட்சியாகவே காட்சியளிக் கிறது. ஆனால் சோனியா, ராகுல், அசாருதீன் என அக்கட்சியின் பிரபலங்கள் உத்தரப்பிரதேச மாநிலத்தில்தான் போட்டியிடுகின்றனர் என்பது ஒரு விநோதமான உண்மையாகும்.

மனிதநேய மக்கள் கட்சி தலைமையில் உதயமானது“-சமூக ஜனநாயக முன்னணி”



மனித நேய மக்கள் கட்சி, புதிய தமிழகம், இந்திய தேசிய லீக் ஆகிய 3 கட்சிகள் ஒன்றாக சேர்ந்து புதிய கூட்டணியை உருவாக்கியுள்ளது. “சமூக ஜனநாயக முன்னணி” என்ற பெயரில் இந்த கூட்டணி உருவாக்கப்பட்டுள்ளது.
 
இதைத்தொடர்ந்து மனித நேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா, புதிய தமிழகம் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, இந்திய தேசிய லீக் மாநில தலைவர் சையத்இனாயத்துல்லா ஆகியோர் கூட்டாக சென்னையில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது:-


 
தி.மு.க., அ.தி.மு.க. கூட்டணிக்கு எதிராக “சமூக ஜனநாயக முன்னணி” என்ற புதிய கூட்டணியை நாங்கள் அமைத்திருக்கிறோம். கடந்த 1 மாதமாக பேசி இன்று இந்த கூட்டணி உருவாகி இருக்கிறது. எங்களுடன் சமத்துவ மக்கள் கட்சி, கொங்கு வேளாளர் பேரவை மற்றும் சில அமைப்புகள் பேசி வருகின்றன.
 
இந்த கூட்டணியில் இடம் பெற்றுள்ள மனித நேய மக்கள் கட்சி 4 தொகுதியில் போட்டியிடுகிறது. மயிலாடுதுறை- ஜவாஹிருல்லா, மத்திய சென்னை- எஸ்.ஹைதர்அலி, பொள்ளாச்சி-உமர், ராமநாதபுரம்-சலீமுல்லா கான் ஆகியோர் போட்டியிடுகிறார்கள்.
 
இன்னும் சில தொகுதிகளில் போட்டியிடுவது பற்றி பின்னர் அறிவிப்போம். 

புதிய தமிழகம் கட்சி தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர் ஆகிய 3 தொகுதிகளில் போட்டியிடுகிறது. தென்காசியில் டாக்டர் கிருஷ்ணசாமி போட்டியிடுகிறார். மற்ற தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் பின்னர் அறிவிக்கப்படும்.
 
இந்திய தேசிய லீக் 3 தொகுதியில் போட்டியிடுகிறது. திருச்சி, தஞ்சை, கோவை அல்லது தேனி ஆகிய தொகுதிகளில் போட்டியிடுகிறது. இந்த கூட்டணியின் தேர்தல் அறிக்கை விரைவில் வெளியிடப்படும்.
 
இந்த அணியில் விரைவில் இன்னும் பலர் சேருவார்கள்.
 
கேள்வி:- தி.மு.க., அ.தி. மு.க. போன்ற பெரிய கட்சிகளுடன் பேச்சு வார்த்தை நடத்தி விட்டு புதிய கூட்டணியை உருவாக்கியது ஏன்?
 
ஜவாஹிருல்லா பதில்:- தி.மு.க.வுடன் 1995-ம் ஆண்டு முதல் கூட்டணி சேர்ந்து போட்டியிட்டோம். இந்த தேர்தலில் போட்டியிட பேச்சுவார்த்தை நடத்தினோம். ஆனால் சிறுபான்மையினரான எங்கள் கட்சி தனி முத்திரை பதித்து விடும் என்று கருதி 1 தொகுதியை கொடுத்து ஓரம் கட்டப்பார்த்தார்கள்.
 
அதுவும் தி.மு.க. சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்று வற்புறுத்தினார்கள். தி.மு.க. காலம் காலமாக இப்படித்தான் செய்து வருகிறது.
 
சொந்த சின்னத்தில் போட்டியிட விரும்பினோம். அதை அவர்கள் ஏற்க வில்லை. இப்போது தி.மு.க. 21 தொகுதியில் அல்ல 22 தொகுதியில் போட்டியிடுகிறது. காதர்மொய்தீன் முஸ்லிம் லீக் கட்சியும் தி.மு.க. சின்னத்திலேயே நிற்கிறது. அ.தி.மு.க.வுடன் பேச்சுவார்த்தை நடத்த வில்லை. 

கேள்வி:- டாக்டர் ராமதாஸ் உங்களிடம் அ.தி.மு.க. வுக்கு ஆதரவு கேட்டாரா?
 
பதில்:- டாக்டர் ராமதாசுடன் நீண்ட காலமாக பழகியுள்ளேன். அவரது கோட்பாடு எனக்கு பிடிக்கும். அ.தி.மு.க. அணிக்கு ஆதரவு தர வேண்டும் என அவர் கேட்டார். நான் எங்கள் நிலைப்பாட்டை எடுத்துக்கூறினேன்.
 
கேள்வி:- எல்லாத்தொகுதிகளிலும் போட்டியிடுவீர்களா?
 
பதில்:- 40 தொகுதிகளிலும் போட்டியிட வாய்ப்பு உள்ளது.
 
கேள்வி:- தேர்தல் பிரசாரம் எப்போது தொடங்குவீர்கள்?
 
பதில்:- நாளை தொடங்குகிறோம்.
 
கேள்வி:- எதை மையமாக வைத்து பிரசாரம் செய்வீர்கள்?
 
கிருஷ்ணசாமி பதில்:- இலங்கை தமிழர் பிரச்சினையை தி.மு.க., அ.தி.மு.க. கைவிட்டு விட்டது. இலங்கை பிரச்சினையை எடுத்து வைப்போம். வடக்கு வாழ்கிறது தெற்கு தேய்கிறது என்பது போல தென் மாவட்டங்கள் புறக்கணிக்கப்படுகின்றன. கடந்த 40 வருடத்தில் தென் மாவட்டங்களில் கல்வி, மருத்துவம், தொழிற்சாலை போன்றவை உருவாக்கப்பட வில்லை.
 
கேள்வி:- எந்த சின்னத்தில் போட்டியிடுவீர்கள்?
 
பதில்:- எல்லோரும் ஒரே சின்னத்தில் போட்டியிட விரும்புகிறோம்.

வீட்டிற்கு ஒரு நானோ கார் ரித்திஷின் தடாலடி அறிவிப்புகள் (தேர்தல் நகைச்சுவை)


இராமநாதபுரம் மாவட்டத்தின் திமுக வேட்பாளரும் வருங்கால ஆஸ்கர் நாயகனும், எட்டாவது வள்ளலாக தன்னைத் தானே கூறிக் கொள்ளும் நடிப்புலக நாயகன் ஜே,கே, ரித்திஷ் இன்று ராமநாதபுரம் அரண்மனையில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் அறிவித்த தடாலடி தேர்தல் அறிவிப்புகள்.

ஒரு கற்பனை நகைச்சுவைக்காக மட்டும்.

1) நான் ஆட்சிக்கு வந்தால் வீட்டிற்கு ஒரு நானோ கார் வழங்குவேன். 

2) நான் நடித்து இன்னும் திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கும் கானல் நீர் மற்றும் நாயகன் திரைப்படங்களின் ஒரிஜினல் டிவிடி கேசட் ஒவ்வொரு குடிமகனுக்கும் வழங்கப்படும். (இனிமேல் நடிக்கவே மாட்டேன் என்றால் நன்றாக இருக்கம்) இதனை ப்ளை பண்ணிப் பார்க்க டி.வி.டி ப்ளையர் இல்லாவதர்களுக்கு டி.வி.டி பிளையர்களும் வழங்கப்படும்.

3) என்னை நீங்கள் தேர்ந்தெடுத்தால் இனிமேல் கோவில் முளைக் கொட்டு நிகழ்ச்சிகளில் ஆடிப் பாடுவதற்காக தீபிகா படுகோன், ஐஸ்வர்யா ராய், பிரிட்னி பியர்ஸ், ஏன்ச­னா ஜோ­ ஆகியோரை எல்லாம் அழைத்து வருவேன்.

4) இராமநாதபுரம் மாவட்டத்தில் நிலவும் தண்ணீர் பிரச்சனையை தீர்ப்பதற்காக உடனே டாஸ்மாக் உற்பத்தி நிலையத்தின் கிளை அலுவலகத்தை உடனடியாக இராமநாதபுரத்திலேயே திறக்க வைப்பதற்கான அனைத்து முயற்சியையும் செய்திடுவேன்.

Monday, April 13, 2009

மனிதநேய மக்கள் கட்சி நிர்வாகிகளுடன் டாக்டர் ராமதாஸ் திடீர் சந்திப்பு




தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் என்ற சமுதாய அமைப்பு சமீபத்தில் மனிதநேய மக்கள் கட்சி என்ற பெயரில் அரசியல் இயக்கத்தை உருவாக்கியது.


தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்று இருந்த இந்த கட்சி 2 தொகுதிகளை கேட்டது. ஆனால் ஒரு தொகுதி மட்டும் தான் தர முடியும் என்று தி.மு.க. தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனால் தி.மு.க.வுடன் தேர்தல் உடன்பாடு ஏற்படவில்லை. இதை தொடர்ந்து அ.தி.மு.க. தரப்பில் இருந்து பேசப்பட்டது. இதிலும் உடன்பாடு ஏற்படவில்லை.


இதை தொடர்ந்து அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி புதிய தமிழகத்துடன் இணைந்து போட்டியிட மனித நேய மக்கள் கட்சி முடிவு செய்தது.

முதல் கட்டமாக மத்திய சென்னை, மயிலாடுதுறை, ராமநாதபுரம் ஆகிய 3 தொகுதிகளில் போட்டியிடுவதாக மனித நேய மக்கள் கட்சி அறிவித்தது.

மத்திய சென்னையில் ஹைதர் அலியும், மயிலாடுதுறையில் பேராசிரியர் ஜவாகிருல்லாவும், ராமநாதபுரத்தில் சலிமுல்லாகானும் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டனர்.


இந்த நிலையில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், தலைவர் ஜி.கே.மணி ஆகியோர் இன்று மதியம் 12.30 மணியளவில் சென்னை மண்ணடியில் உள்ள மனித நேய மக்கள் கட்சி அலுவலகத்துக்கு வந்தனர்.

அவர்களை மனித நேய மக்கள் கட்சி ஒருங்கிணைப்பாளர் ஜவாகிருல்லா, தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக்கழக செயலாளர் ஹைதர்அலி ஆகியோர் வரவேற்றனர். அப்போது டாக்டர் ராமதாஸ் அவர்களிடம் உங்கள் நட்பு நீடித்த நட்பாக இருக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன் என்று கூறினார்.

பின்னர் மனிதநேய மக்கள் கட்சி நிர்வாகிகளுடன் டாக்டர் ராமதாஸ் தனியாக பேசினார். அ.தி.மு.க. கூட்டணிக்கு ஆதரவு தருமாறு அவர்களிடம் வற்புறுத்தியதாக கூறப்படுகிறது.

மனிதநேய மக்கள் கட்சியின் பொள்ளாச்சி வேட்பாளர் அறிவிப்பு



மனிதநேய மக்கள் கட்சியின் பொள்ளாச்சி வேட்பாளராக தமுமுகவின் மாநிலச் செயலாளர் கோவை. இ. உமர் அவர்கள் அறிவிக்கப் பட்டுள்ளார். 

இவர் ஆரம்ப காலத்தில் கோவை குனிய முத்துர் கிளை தலைவராகப் பணியாற்றி பின்னர் மாவட்டச் செயலாளராக பணியாற்றினார். பின்னர் மாவட்டத் தலைவர் பதவிக்குப் பின்னர் மாநிலச் செயலாளராக பணியாற்றி வருகிறார், கோவை மாவட்ட மக்களால் நன்கு அறிமுகமானவர். 

Sunday, April 12, 2009

மனிதநேய மக்கள் கட்சி தலைமையில் 4வது அணி: தி.மு.க., - அ.தி.மு.க.,வுக்கு புது சவால்



லோக்சபா தேர்தல் களத்தில், மனிதநேய மக்கள் கட்சி தலைமையில் நான்காவது அணி உருவாகியுள்ளது. இதில், சமத்துவ மக்கள் கட்சி, புதிய தமிழகம், கொங்கு வேளாளர் பேரவை மற்றும் பல்வேறு சமூக அமைப்புக்கள் இணைந்துள்ளன. இந்தக் கூட்டணி, தமிழகத்தின் முக்கிய கட்சிகளான தி.மு.க., - அ.தி.மு.க.,வுக்குப் புதிய சவாலாக உருவெடுத்துள்ளது.


லோக்சபா தேர்தலில், தி.மு.க., - அ.தி.மு.க., தலைமையிலான கூட்டணிகள், தே.மு.தி.க., என மூன்று அணிகள் போட்டியிடுகின்றன. தற்போது, மனிதநேய மக்கள் கட்சி தலைமையில் பல்வேறு கட்சிகள் மற்றும் சமூக அமைப்புக்கள் இணைந்து, நான்காவது அணியாக களம் இறங்குகின்றன. தமிழக முஸ்லிம்களை ஒன்று திரட்டி, அவர்களை சமூக, பொருளாதார நிலையில் முன்னேற்ற, கடந்த 15 ஆண்டுகளுக்கு முன் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் துவக்கப் பட்டது. கடந்த தேர்தல்களின் போது, அ.தி.மு.க., - தி.மு.க., கூட்டணிகளுக்கு இக்கட்சி மாறி மாறி தார்மீக ஆதரவு அளித்து, அக்கட்சிகளை வெற்றியடையச் செய்து வந்தது.


கடந்த பிப்ரவரியில் தாம்பரத்தில் நடந்த மாபெரும் மாநாட்டில் த.மு.மு.க., என்ற அமைப்பு, மனிதநேய மக்கள் கட்சி என்ற அரசியல் அமைப்பாக மாறியது. மனிதநேய மக்கள் கட்சிக்கு தமிழகத்தில் பரவலாக ஆதரவு உள்ளது. லோக்சபா தொகுதிகளில், கிட்டத்தட்ட 20 தொகுதிகளில் இக்கட்சி கணிசமாக ஓட்டுக்களை கொண்டுள்ளது. அதிக அளவில் முஸ்லிம் ஓட்டுக்கள் உள்ள தஞ்சாவூர், திருச்சி, வேலூர், மயிலாடுதுறை, ராமநாதபுரம், மத்திய சென்னை ஆகிய ஆறு தொகுதிகளில் வெற்றியை நிர்ணயிக்கும் கட்சியாக இக்கட்சி உள்ளது.



லோக்சபா தேர்தலில் தங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் கட்சியுடன் கூட்டணி வைத்துக் கொள்ள மனிதநேய மக்கள் கட்சி முடிவு செய்தது. முதலில், தி.மு.க., வுடன் பேச்சுவார்த்தை நடத்தப் பட் டது. கூடுதல் தொகுதிகள், தனிச் சின்னம் என்ற கோரிக்கை முன் வைக்கப்பட்டது. தி.மு.க., இக் கோரிக்கையை நிராகரித்தது. அ.தி.மு.க., ஒத்து வராததால், லோக்சபா தேர்தலில் தனித்துப் போட்டியிட மனிதநேய மக்கள் கட்சி முடிவெடுத்தது.



இதையடுத்து, தங்கள் கொள்கைகளுக்கு உடன்பாடான கட்சிகள் மற்றும் சமூக அமைப்புக்களை ஒருங்கிணைத்து, லோக்சபா தேர்தலைச் சந்திக்க அக்கட்சி திட்டமிட்டது. இதன்படி, நடிகர் சரத் குமாரின் சமத்துவ மக்கள் கட்சி, புதிய தமிழகம் ஆகிய கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு, முடிவு எட்டப்பட்டது. அடுத்ததாக, கொங்கு வேளாளர் பேரவை உள் ளிட்ட பல்வேறு சமூக அமைப்புக்களுடன் பேச்சுவார்த்தை நடந்தது. தற்போது, தமிழகத்தில், மனிதநேய மக்கள் கட்சி தலைமையில் நான்காவது அணி உருவாகியுள்ளது. இக்கூட்டணியில் உள்ள கட்சிகள் மற்றும் சமூக அமைப்புக்களுக்கான தொகுதி உடன்பாடு குறித்து பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. நெல்லை தொகுதி சமத்துவ மக்கள் கட்சிக்கும், தென்காசி தொகுதி புதிய தமிழகத்திற்கும் ஒதுக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


முஸ்லிம் மக்கள் அதிகமாக உள்ள மத்திய சென்னை, மயிலாடுதுறை, ராமநாதபுரம் ஆகிய தொகுதிகளில் போட்டியிட மனிதநேய மக்கள் கட்சி திட்டமிட்டுள்ளது. இருப்பினும், இதுகுறித்து ஆலோசனை நடந்து வருவதாகவும், இறுதி முடிவு எட்டப்படவில்லை என்றும் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மயிலாடுதுறையில் கட்சியின் மாநிலத் தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லாவும், மத்திய சென்னையில் கட்சியின் மாநிலப் பொதுச் செயலர் ஹைதர்அலியும், ராமநாதபுரத்தில், அந்த மாவட்டச் செயலர் கலிமுல்லாகானும் போட்டியிடுவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மனிதநேய மக்கள் கட்சி, தமிழக லோக்சபாத் தேர்தலில் போட்டியிடுவதால் தி.மு.க.,வுக்குத் தான் பெரும் பாதிப்பு ஏற்படும் என்று அரசியல் பார்வையாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.


இதுகுறித்து அவர்கள் கூறுகை யில், "பெரும்பாலான தேர்தல்களில் தி.மு.க.,விற்குத் தான் த.மு.மு.க., ஆதரவு அளித்து வந்தது. புதுச்சேரி உட்பட 40 லோக்சபா இடங்களை தி.மு.க., கூட்டணி பெறவும், தமிழ கத்தில் தி.மு.க., ஆட்சி ஏற்படவும் த.மு.மு.க., பெரும்பங்கு வகித்தது. பொதுவாக முஸ்லிம் ஓட்டுக்கள் தி.மு.க.,விற்குத் தான் அதிகம் கிடைக்கும். இந்நிலையில், அச் சமூகத்தினரின் அதிகமான ஓட்டுக் களை கைவசம் வைத்திருக்கும் மனிதநேய மக்கள் கட்சி இம்முறை தனித்துப் போட்டியிடுவதால், அதிக நஷ்டம் தி.மு.க.,விற்கு ஏற்படும். அதேவேளையில், குறிப்பிட்ட சில தொகுதிகளில் நான்காவது அணியால் அ.தி.மு.க.,விற்கும் பாதிப்பு ஏற்படும்' என்றனர்.


Source Dinamalar