Wednesday, May 27, 2009

அகதிகள் முகாமின் அவலங்கள்



இலங்கை இனக்கலவரத்தால் பாதிக்கப்பட்டு தமிழகத்திற்கு அகதிகளாக வரும் இலங்கைத் தமிழர்கள் இராமேஸ்வரத்திலிருந்து சுமார் 20 கி.மீ தூரத்தில் மண்டபம் அகதிகள் முகாமில் தங்க வைக்கப் பட்டுள்ளனர். அரசு நல்ல நோக்கில் தொடங்கிய இந்த முகாமில் சுமார் 4 ஆயிரத்திற்கும் அகதிகள்; வசித்து வருpகின்றனர். மண்டபம் முகாமில் 500க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் தொகுப்பு வீடுகளாக உள்ளது.


இதில் பலவற்றில் மனிதப் புலக்கமே கிடையாது. இவைகள் பழுதடைந்தும், உடைந்து சின்னா பின்னமாகவும் காட்சி அளிக்கின்றது. கடந்த 1980ம் ஆண்டில் இருந்தே இங்குள்ள கட்டிடங்கள் அனைத்தும் முறையான பராமரிப்பின்றி உள்ளது.இந்த நிலையில் இந்த வீடுகளிலுள்ள கதவுகள் , ஜன்னல்கள் , கம்பி, மின்சாரவயர்கள், என பெரும்பாலான பொருட்களையம் சமூக விரோத கும்பல்கள் திருடிச் சென்றுவிட்டன. இந்நிலையில் காலியாக உள்ள தொகுப்பு வீடுகளில் பல சமூக விரோத செயல்கள் எந்த வித தடையும் இல்லாமல் அரங்கேறி வருகின்றது.


இம்முகாமில் ஒரே ஒரு அரசு மருத்துவமனை உள்ளது. இந்த மருத்துவமனையில் நூற்றுக்கணக்கான நோயாளிகள் வந்து செல்கின்றனர். இவர்களை பராமரிக்க 3 மருத்துவர்கள் இருந்த நிலைமை மாறி தற்போது வாரத்தில் 2 தினம் மட்டும் ஒரே ஒரு மருத்துவர் மட்டும் வந்து செல்கின்றார். அவரும் ஆண் மருத்துவர் . ஒரு மருத்துவர் மட்டுமே இங்கு வருவதால் நோயாளிகள் அதிக நேரம் காத்திருக்க வேண்டியுள்ளது. மேலும் அவர்களுக்கு சிறந்த மருத்துவமும் கிடைப்பது கெடையாது.


ஒரு காலத்தில் சிறந்த மருத்துவனையாக திகழ்ந்தது. ஆனால் இப்போழுது இதன் நிலையோ தலைகீழ். கடந்த ஐந்து ஆண்டுகளுக்குமேலாக இந்த மருத்துவமனையில் ஒரு பெண் டாக்டரே கூட வந்து சென்றதில்லை என்பதே ஆச்சரியமான உண்மை. பெண் மருத்துவர் இல்லாதக் காரணத்தினால் பெண் நோயாளிகள் இராமேஸ்வரம் அல்லது இராமநாதபுரத்திற்கு கொண்டு செல்ல வேண்டிய நிலமை. வாரத்திற்கு இரண்டு தினம் மட்டுமே மருத்துவர் இங்கு வருவதால் வரும் நோயாளிகளின் கூட்டத்தை சமாளிக்க முடியாமல் ஸ்டெதாஸ்கோப்பையே உபயோகிக்க முடியாத நிலையில் டாக்டர் அவசர கதியில் இயங்க வேண்டிய நிலைமை இங்கு நிலவுகிறது.


மேலும் டாக்டர் எழுதி கொடுக்கும் சீட்டுக்கு மருந்து கொடுக்கும் இடத்தில் இருக்கும் ஒரே ஒரு ஊழியரோ அந்த திரளான கூட்டத்தை சமாளிக்க முடியாமல் மாத்திரை மருந்துகளை வாரி வழங்க வேண்டியதுள்ளது.


இம்முகாமில் கழிப்பறைகள் பல இருந்தும் கூட ஒன்று கூட புதுப்பிக்கபடவில்லை. இதனால் இங்கு இருக்கும் ஒரு கழிப்பறையைக் கூட பயன் படுத்த முடியாத நிலையில் உள்ளது. ஏனேனில் கழிப்பறைகளின் கழிவுகள் நிறைந்து தெரு ஓரங்களில் வழிந்தோடுவதும் மற்றுமொரு காரணமாகும். இதனால் பல்வேறு தொற்று நோய்கள் பரவ ஏதுவாகின்றது. மேலும் பெண்களிலிருந்து குழந்தைகள் வரை பாதுகாப்பிள்ளாத இடங்களில் ஒதுங்க வேண்டிய அவலநிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

அசுத்த நீரை வெளியேற்றுவதற்கு இப்பகுதியில் கழிவுநீர் கால்வாய்களே இல்லை. இவற்றால் வீடுகளில் இருந்து வெளியேற்றப் படும் அசுத்த நீர் தெருக்களிலேயே தேங்கி நிற்கின்று. இதனால் கொசுக்கடியினாலும் பல்வேறு தொற்;று நோயினாலும் இங்குள்ள அகதிகள் பாதிக்கப் பட்டுள்ளனர்.

இம்முகாமில் திடிர் திடிரென மின்தடை ஏற்படுவதினாலும், இப்பகுதிகளில் முறையான தெருவிளக்குகள் வசதிகள் செய்துத் தரப்படாதினாலும் இரவு நேரங்களில் அகதிகள் வெளியே வரவே நடமாடப் பயப்படுகின்றனர்.

இங்குள்ள தொடக்கப் பள்ளியில் 600க்கும் மேற்பட்ட அகதி மாணவ, மாணவிகள் பயிலுகின்றனர். இருப்பினும் அவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்றார்போல் ஆசிரியர்களின் எண்ணிக்கை இல்லை. இதனால் மாணவர்களின் கல்வித்தரம் மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ளது.

அகதிகள் முகாமில் உள்ள சாலைகள் பல குண்டும் குழியுமாகவும், மணல் குவிந்தும் போக்குவரத்திற்கு மிகவும் இடையுறாக உள்ளது. இவற்றால்அரசுமருத்துவமனையில் அவசர கேஸ்களை கொண்டு செல்வதில் மிகுந்த சிரமமும், காலதாமதமும் ஏற்படுகின்றது.


இத்தைகை கொடிய அவலங்களில் இருந்து இலங்கை அகதிகளை காக்க மத்திய, மாநில அரசுகளும் இலங்கை அரசும் ஒரு சேர்ந்து நடவடிக்கை எடுத்தால் மட்டுமே இவர்களின் அவலநிலைகளுக்கு தீர்வு காணஇயலும்.

Tuesday, May 26, 2009

கலைஞர் குடும்பமும் ஜுஜு விளம்பரமும் (நகைச்சுவை கார்டுன்ஸ்)

தினமணி பத்திரிக்கையில் வெளியான ஜுஜு கார்டுன்ஸ் ஒரு நகைச்சுவை காக்டெய்ல்

ஈழமும் - இந்திய தேர்தலும்....



தமிழ் நாட்டில் தி.மு.க-காங்கிரஸ் கூட்டணி 28 இடங்களில் ஜெயித்திருப்பதை ஏதோ ஓர் அதிசயம் போல மீடியாக்களும் பத்திரிகைகளும் சித்திரித்துக் கொண்டிருக்கின்றன. கூட்டணிகள் அமைந்து தேர்தல் பிரசாரம் தொடங்கியதிலிருந்தே, இப்படித்தான் நடக்கும் என்று நான் தீர்மானமாக சொல்லி வந்தேன். நிறைய பேர் அதை நம்பவில்லை.



அதே போல இலங்கை/ஈழத் தமிழர் பிரச்சினை, தமிழக மக்களின் அக்கறைக்கும் அனுதாபத்துக்கும் உரிய பிரச்சினையாக இருக்கிறதே தவிர, அது தேர்தல் பிரச்சினையாக தமிழக வாக்காளர்களால் கருதப்படும் வாய்ப்பு இல்லை என்று நான் சொல்லி வந்ததும் மெய்ப்பிக்கப்பட்டிருக்கிறது.



உண்மையில் இலங்கைத்தமிழர் பிரச்சினையில் அதிக குரல் கொடுத்து வந்த கட்சிகளின் வாக்கு சதவிகிதம் குறைந்திருப்பதுதான் புள்ளி விவரங்களில் தெரிய வரும் அதிர்ச்சித் தகவல்.



வெறும் கூட்டணிக் கணக்குகளின் அடிப்படையில் பார்த்தால், சென்ற முறை 40க்கு 40 வென்ற தி.மு.க- காங்கிரஸ் கூட்டணியிலிருந்து பா.ம.க, ம.தி.மு.க, இரு இடதுசாரிக் கட்சிகள் அ.தி.மு.க அணிக்குப் போய்விட்டதால், தி.மு.க அணி படு தோல்வியை சந்தித்திருக்க வேண்டும். அது மட்டுமல்ல, ஈழத்தமிழர் பிரச்சினையில் நீண்ட காலமாக தீவிரமாக செயல்பட்டு வந்திருக்கும் வைகோ, இந்த முறை தீவிரமாக இயங்கிய பா.ம.க, கம்யூனிஸ்ட் கட்சிகள் அ.தி.மு.கவுடன் சேர்ந்தது மட்டுமல்ல, அ.தி.மு. க தலைவி ஜெயலலிதா அந்தர் பல்டி அடித்து தான் தனி ஈழம் வாங்கித்தரப் போவதாக வேறு அறிவித்தார்.



ஈழத்தமிழர் பிரச்சினையை மட்டும் தமிழக வாக்காளர்கள் தேர்தல் பிரச்சினையாகக் கருதியிருந்தால், நிச்சயம் மேற்கண்ட காரணங்களினால், அ.தி.மு.க அணி 40 க்கு 40 பெற்றிருக்க வேண்டும். ஆனால் தொடர்ந்து தி.,மு.க - காங்கிரஸ் அணிதான் அதிக இடங்களைக் கைப்பற்றியிருக்கிறது. காரணம் மக்கள் தேர்தலில் வாக்களிப்பதற்கான அம்சங்களில் ஈழப்பிரச்சினைக்கு முக்கிய இடம் அளிக்கவில்லை என்பதுதான்.



ஆனால் கடைசி ஒரு மாதத்தில் ஈழப் பிரச்சினை முக்கிய தேர்தல் பிரச்சினை ஆகிவிட்டது போன்ற ஒரு தோற்றம் மீடியாவில், பத்திரிகைகளில் ஏற்பட்டது. அப்படித்தானோ என்ற பயத்தில் கடைசி நிமிடத்தில் கலைஞர் கருணாநிதி கூட அரை நாள் உண்னாவிரதம் மேற்கொண்டார்.



அந்த மாயையை ஏற்படுத்தியதில் பெரும் பங்கு தேர்தல் அரசியலில் ஈடுபடாத அமைப்புகளான பெரியார் திராவிடர் கழகத்துக்கும் மக்கள் கலாச்சாரக் கழகத்துக்கும், இன்னும் ஒரு சில சிறு இயக்கங்களுக்கும் உரியதாகும். வெகுஜன இதழ்களில் இருக்கும் ஆதரவான பத்திரிகையாளர்கள் மூலம் ஈழப் பிரச்சினையை தேர்தல் பிரச்சினையாக சித்திரித்தது முதல், தொடர்ந்து களத்தில் வெவ்வேறு போராட்டங்கள் நடத்திய கடும் உழைப்பின் மூலம் அவை இதை சாதித்தன. ஆனால் இந்த அமைப்புகள் வெகுஜன இயக்கங்களாக இல்லாத காரணத்தினால், மீடியாவில் ஆக்கியதைப் போல பொது மக்களிடையேயும் ஈழப் பிரச்சினையை தேர்தல் பிரச்சினையாக ஆக்க முடியவில்லை.



தேர்தல் அரசியலில் பெரும் அனுபவம் உடைய கலைஞர் கருணாநிதி இதை உணர்ந்திருந்தார் என்றே சொல்ல வேண்டும். ஜெயலலிதா ஈழம் பற்றி[ப் பேசும்போதெல்லாம் அதை உடைக்க தானும் சில எதிர்வினைகளைச் செய்தாரே தவிர, தானும் இதை தேர்தல் பிரச்சினையாக ஆக்கும் சிக்கலில் அவர் போய் சிக்கிக் கொள்ளவில்லை.



கடும் ஈழ எதிர்ப்பாளராக விளங்கிய ஜெயலலிதாவுடன் கூட்டு சேர்ந்தபோதே வைகோவும் பா.ம.கவும், கம்யூனிஸ்ட்டுகளும் ஈழ ஆதரவாளர்களிடம் கூட கொஞ்சம் தங்கள் நம்பகத்தன்மையை இழக்கத்தான் செய்தனர். கடைசி வரை காங்கிரஸ் ஆட்சியில் அதிகாரத்தைப் பங்கு போட்டு அனுபவித்துவிட்டு இறுதி நொடியில் அணி மாறிய பா.ம.கவின் நம்பகத்தன்மை எல்லா வாக்காளர்களிடமும் சரிந்து விட்டது. சென்ற முறை பெற்ற 6.7 சதவிகிதத்திலிருந்து இம்முறை முழுமையாக ஒரு சதவிகிதத்தை அது இழந்துவிட்டிருக்கிறது.



அ.தி.மு.க இழந்திருப்பது இன்னும் அதிகம். கிட்டத்தட்ட ஏழு சதவிகிதத்தை இழந்திருக்கிறது. ஜெயலலிதாவின் ஈழ ஆதரவு வேடம் துளியும் எடுபடவில்லை.



காங்கிரஸ் கட்சியின் பிரபல வேட்பாளர்களான ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், தங்கபாலு போன்றோர் தோற்றதற்கு அவர்களுடைய ஈழ விரோத நிலைப்பாட்டை அமபலப்படுத்தி ஈழ ஆதரவாளர்கள் செய்த பிரசாரம் காரணம் என்று சில வட்டாரங்களில் சொல்லப்படுகிறது. ஈழப் பிரச்சினையில் இதே நிலை எடுத்த காங்கிரசின் கே.எஸ்.அழகிரி கடலூரில் அமோக வெற்றி அடைந்திருக்கிறார். உண்மையில் இளங்கோவனின் தோல்விக்குப் பிரதானக் காரணம் கொங்கு வேளாளர் பேரவை நிறுத்திய வேட்பாளர் சுமார் ஒரு லட்சம் வாக்குகளைப் பிரித்து எடுத்துச் சென்றதுதான். தங்கபாலுவுக்கு உட்கட்சிப் பூசல் பிரச்சினை.



ஈழப் பிரச்சினையில் தமிழகத் தலைவர்களிலேயே தீவிரமானவரும் தன் அரசியலையே அதில் பணயம் வைத்தவருமான வைகோவுக்கு,அந்தப் பிரச்சினை தேர்தல் வெற்றி பெறத் துளியும் உதவவில்லை.
தேர்தல் பிரச்சினையாக ஈழத்தமிழர் சிக்கலை ஆக்க முற்பட்ட அமைப்புகள் இந்த தேர்தலில் உணரவேண்டிய பாடம் என்பது, அவர்களுடைய பலம், மீடியா வாயிலாக பிரச்சினைக்கு அழுத்தம்கொடுத்து கவன ஈர்ப்பு செய்யும் அளவில் மட்டுமே இருக்கிறது என்பதுதான். பொது மக்களிடையே தங்கள் செல்வாக்கை உயர்த்திக் கொள்ளவும் தங்கள் கொள்கைகளை ஏற்கச்செய்யவும் நீண்ட கால தொடர் வெகு ஜன நடவடிக்கைகளை தேர்தல் கட்சிகளான தி.மு.க போல மேற்கொண்டால் மட்டுமே முடியும் என்பதை அவை உணரவேண்டும்.



தேர்தல் முடிவுகள் தி.மு.க காங்கிரஸ் அரசுகளுக்கு மக்கள் அளித்த ஆதரவா என்று பார்த்தால், இரு அரசுகளிடமும் மக்களுக்கு பெரும் அதிருப்தி ஏதும் இல்லை என்றே எடுத்துக் கொள்ள வேண்டும். அப்படி ஒரு அதிருப்தி பண வீக்கம், மின்வெட்டு போன்றவற்றால் உருவாகியிருந்தால், அதைப் பயன்படுத்திக் கொள்ள எதிர்க்கட்சிகள் தவறிவிட்டன. ஈழத்தமிழர் பிரச்சினையை முன்னிறுத்தியதில் இந்த அதிருப்தியை, பிரதானப்படுத்த அ.தி.மு.க தவறிவிட்டது.



உண்மையில் இந்தத் தேர்தலில் அசலான லாபம் அடைந்திருப்பவர்கள் இருவர்தான். ஒருவர் விஜய்காந்த். சுமார் பத்து சதவிகிதம் வாக்குகளை எம்.பி. தேர்தலில் அவர் கட்சி பெற்றிருப்பது சாதனைதான். அவர் தான் ஆதரிக்கும் பிரதமர் வேட்பாளர் என்று அடையாளம் காட்ட யாரும் இருக்கவில்லை. அவரே டெல்லிக்குச் செல்வதாக சொல்லிக் கொள்ளும் நிலையும் இல்லை. மாநில முதல்வர் பதவிதான் அவர் இலக்கு. இந்த நிலையில் அவருக்கென்று 10 சதவிகித வாக்குகளைத் தக்க வைத்திருப்பது தமிழக அரசியலில் தொடர்ந்து அவர் கட்சிக்கு இருக்கும் முக்கியத்துவத்தைக் காட்டுகிறது.



லாபம் அடையும் இரண்டாமவர் என் போன்ற ஒரு சிலரின் ஆதரவு பெற்ற வேட்பாளரான 49 ஓ !. ஆயிரக்கணக்கில் தமிழகமெங்கும் 49 ஓ பதிவாகியிருக்கிறது. எல்லா கட்சி வேட்பாளர்களையும் நிராகரிக்கும் இந்த உரிமையை ஆயிரக்கணக்கான மக்கள் பகிரங்கமாக துணிவோடு போய் பதிவு செய்திருக்கிறார்கள். இன்னும் ஆயிரக்கணக்கானவர்கள் தேர்தல் வாக்குச் சாவடி அதிகாரிகளின் சதியால் தடுக்கப்பட்டிருக்கிறார்கள்.



நரேஷ் குப்தா உத்தரவின் படி இந்த அதிகாரிகளுக்கு தேர்தல் வகுப்பில் 49 ஓ பற்றி சொல்லியிருந்தபோதும், ஒவ்வொரு வாக்குச் சாவடிக்கும் 49 ஓ பற்றிய சுவரொட்டி வழங்கப்பட்டிருந்தபோதும், வேண்டுமென்றே பல அதிகாரிகள் மக்களை 49 ஓ போடவிடாமல் தடுத்திருக்கிறார்கள். போட்டவர்களில் பெரும்பாலோர் சண்டையிட்டுத்தான் தங்கள் உரிமையை நிலை நாட்ட வேண்டியிருந்தது.



தடுக்கப்பட்ட பொது மக்களுக்கு ஒரு வேண்டுகோள்: உடனே இரு கடிதங்களை எழுதுங்கள். முதல் கடிதத்துக்கான முகவரி: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா, புனித ஜார்ஜ் கோட்டை, சென்னை 3. கடித விஷயம் : வாக்குப் பதிவு நாளன்று ..... மணிக்கு, ..........என்ற முகவரியில் இருக்கும் ............எண்ணுள்ள வாக்குச்சாவடியில் என்னை 49 ஓ போட விடாமல்தேர்தல் அதிகாரி தடுத்தார். அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கும்படி கோருகிறேன்.



இரண்டாவது கடிதம் டெல்லியில் இருக்கும் உச்ச நீதி மன்ற தலைமை நீதிபதிக்கு. I have been refused the right to register 49 O, on 13.5.2009 pollind day at booth number... located at .... by the booth officials. Please order installation of seperate button in EVMs for 49 O so that we can vote in secrecy without intimidation and prevention.
இந்தக் கடிதங்கள் நிச்சயம் வருங்காலத்தில் தேர்தல் சீர்திருத்தங்கள் விரைவுபட உதவக்கூடியவை. தாமதிக்காமல் அனுப்புங்கள்.



டெல்லியில் காங்கிரஸ் மறுபடியும் ஆட்சி அமைப்பதில் எனக்கு ஒரு மகிழ்ச்சி; ஒரு வருத்தம். பி.ஜே.பி ஆட்சி அமைக்கும் ஆபத்தை காங்கிரஸ் தடுத்துவிட்டது என்பது மகிழ்ச்சி. வருத்தம் - இடிப்பாரை இல்லா ஏமரா மன்னனாக காங்கிரஸ் பலம் அமைந்துவிட்டது என்பதுதான். இடதுசாரிகள் முட்டுக்கட்டை போடும் வலிமையில் இல்லாமல் போய்விட்டது ஆபத்தானது. தேர் உரிய பாதையில் செல்ல முட்டுக்கட்டை அவசியம்.



ஏன் இவ்வளவு மோசமாக தோற்றோம் என்பதை இடதுசாரிகள் சுயவிமர்சனம் செய்துகொள்ள வேண்டும். செய்தால் அவர்களிடம் உள்ள குறைகள் மட்டும் அல்ல, தேர்தல் முறையிலே உள்ள மிகப் பெரிய குறைக்கெதிராகவும் விரைந்து போராட வேண்டிய அவசியத்தை உணர்வார்கள். அதுதான் விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறையின் தேவை.



இப்போது விஜய்காந்த் பெற்றுள்ள 10 சதவிகித வாக்குகளின்படி, அவர் கட்சிக்கு மொத்த இடமான 40ல் 4 எம்.பி.கள் சீட்டுகளைத் தரவேண்டும். இதுதான் விகிதாசார முறை. இப்போதைய முறையில் ஒன்று கூட கிடையாது. பா.ம.கவுக்குக் கூட விகிதாசாரப்படி இரு எம்.பிகள் கிடைக்க வேண்டும்.



அடுத்த தேர்தலுக்கு முன்பாக இந்த சீர்திருத்தம் பற்றி எல்லாரும் பேசி மாற்றத்தைக் கொண்டு வர வேண்டும். அப்படிப்பட்ட மாற்றங்கள் வந்தால்தான், தேர்தலில் பணம் விளையாடுவதையும் தடுக்க முடியும்.



இந்த வாரப் பூச்செண்டு:



பதவிக்காக அலையாமல், அடிமட்ட அரசியல் அனுபவத்தை வளர்த்துக் கொள்ள முனைந்திருக்கும் ராகுல் காந்திக்கு இ.வா.பூச்செண்டு.



இந்த வாரக் குட்டு:



வழக்கம் போல வாரிசுகளுக்கு டெல்லி அதிகாரத்தில் பங்கு வாங்கித் தருவதற்காக, தள்ளாத வயதிலும் தள்ளு வண்டியில் டெல்லி வரை அலையும் கலைஞர் கருணாநிதிக்கு இ.வா.குட்டு.




குமுதம் 19.5.2009