Saturday, May 2, 2009

பன்றிக் காய்ச்சல் பரவாமல் தடுப்பது எப்படி?



பன்றிக் காய்ச்சல் (Swine Flu) என்பது பன்றிகளின் சுவாச உறுப்பை தாக்கி, கடுமையான காய்ச்சல் மரணத்தையே ஏற்படுத்தும். புளூ வைரஸ் டைப் ஏ (எச்1 என்1) என்ற வைரஸ் கிருமியால் இந்நோய் ஏற்படுகிறது. பன்றிகளை மட்டுமின்றி பறவைகள், குதிரை மற்றும் மனிதர்களையும் இந்த வைரஸ் தாக்கக்கூடும். இதில் எச்1 என்1, எச்1 என்2, எச்3 என்2 போன்ற வைரஸ் உட்பிரிவுகளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பன்றிகளுடன் நேரடி தொடர்புடைய மனிதர்களை இந்த வைரஸ் எளிதாக தொற்றும். ஐரோப்பாவில் 1965ம் ஆண்டு 17 பேர் இந்த நோயால் பாதிக்கப்பட்டனர். 1976ம் ஆண்டு நியூஜெர்சியிலும் இந்த நோயின் பாதிப்புகள் கண்டறியப்பட்டது. பன்றிகளிலிருந்து, மனிதர்களுக்கு வைரஸ் பரவும் வேகம் குறைவு தான் என்றாலும், பாதிக்கப்பட்ட மனிதனிடமிருந்து இன்னொரு மனிதனுக்கு மிக வேகமாக நோய் பரவும். பன்றி இறைச்சி, உணவு மூலமாக நோய் பரவ வாய்ப்புகள் இல்லை. இந்த நோய் தொற்றியவர்களுக்கு, கடுமையான காய்ச்சல் மற்றும் தலைவலி, உடம்புவலி, சளி, இருமல், தொண்டை எரிச்சல் போன்றவை இருக்கும். சில நேரங்களில் வாந்தியும், வயிற்றுப்போக்கும் ஏற்படும். பாதிக்கப்பட்ட நபர்கள் இருமினாலும், தும்மினாலும் கூட இந்த எச்1 என்1 வைரஸ் வேகமாக பரவி, மற்றவர்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும். இதனால் மனிதர்களுக்கு மரணமும் ஏற்பட வாய்ப்பிருக்கிறது.

""பன்றிகளுக்கு இந்நோயை தடுப்பதற்கான தடுப்பூசி உள்ளது. ஆனால், மனிதர்களுக்கு தடுப்பூசி இல்லை. பாதிக்கப்பட்ட மனிதர்களுக்கு வைரசுக்கு எதிரான மருந்துகள் உள்ளன. நியூரோமினிடேஸ் இன்கிபிடார்ஸ் வகையைச் சேர்ந்த வைரஸ் எதிர்ப்பு மருந்துகள் பயனளிக்கும்,'' தேனியைச் சேர்ந்த டாக்டர் மணிவண்ணன் தெரிவித்தார். ஸ்பெயின் நாட்டில் கடந்த ஆண்டு நவம்பர் 8ம் தேதி, ஒரு கர்ப்பிணி பெண்ணிற்கு எச் 1 என்1 வைரஸ் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அப்போதே இந்த பன்றிக் காய்ச்சல் வைரஸ், அபாயகரமானது என உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்தது. அமெரிக்காவில் 91 பேர், மெக்சிகோவில் 26 பேர், ஜெர்மனியில் மூன்று பேர், இஸ்ரேலில் இருவர், நியூசிலாந்தில் மூன்று பேர், ஸ்பெயினில் நான்கு பேர், இங்கிலாந்தில் ஐந்து பேருக்கு பன்றிக் காய்ச்சல் நோய் பாதிப்புகள் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நோய் தாக்குதலில் மெக்சிகோவில் ஏழு பேர் இறந்துவிட்டனர்.


பன்றிக் காய்ச்சலின் தீவிரத்தை ஆறு கட்டங்களாக உலக சுகாதார நிறுவனம் பிரித்துள்ளது. அதில் மூன்றாவது கட்டத்திலிருந்து நான்காவது கட்டத்திற்கு இந்நோய் தீவிரமடைந்திருப்பதாக உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது. மெக்சிகோவிலும், அமெரிக்காவிலும் கண்டுபிடிக்கப்பட்டுள்ள வைரஸ்களில், பன்றி, பறவைகள் மற்றும் மனிதர்களுக்கான ஜீன்கள் ஒருசேர அமைந்திருப்பது அதிர்ச்சியளிப்பதாக உள்ளது. இந்த வைரஸ் அமைப்பு இதுவரை உலகில் எங்குமே இல்லை. இந்த புதிய வைரஸ் மனிதர்களிடம் அதிவேகமாக பரவி தாக்கி வருகிறது. மெக்சிகோ சென்று விட்டு ஐதராபாத் திரும்பிய ஒருவருக்கு இந்நோய் தாக்குதல் இருப்பதாக சந்தேகிக்கப்பட்டது. மருத்துவ சோதனையில் அவருக்கு நோய் தாக்குதல் இல்லை என தெரியவந்தது. இந்தியாவில் இதுவரை இந்த பன்றிக் காய்ச்சல் மனிதர்களை தாக்கியதாகவோ, மனிதர்களுக்கு நோய் தாக்குதல் ஏற்பட்டதாகவோ தகவல்கள் இல்லை. ஆனால் 2004ம் ஆண்டு டில்லி, மிசோரம், மேற்கு வங்காளம் ஆகிய இடங்களில் இந்நோய் பரவல் ஏற்பட்டு, கால்நடைத்துறையினரால் கட்டுப்படுத்தப்பட்டது. ஆனால், மனிதர்கள் பாதிக்கப்படவில்லை.

"மெக்சிகோ நாட்டுக்கு தேவையில்லாமல் யாரும் செல்ல வேண்டாம்' என, அமெரிக்க அதிபர் ஒபாமா அந்நாட்டு மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். தற்போது அமெரிக்கா மற்றும் மெக்சிகோ நாடுகளில் இருந்து இந்தியா வரும் பயணிகள் பலத்த பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்படுகின்றனர். இந்தியாவில் இந்நோய் பரவாமல் தடுக்க பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைளையும் மத்திய, மாநில அரசுகள் எடுத்து வருகின்றன. பொது இடங்களிலும், பொதுமக்கள் வசிப்பிடங்களிலும் திரியும் பன்றிகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகத்தை பொறுத்தவரை பன்றிகளுக்கு இந்நோய் வந்ததில்லை. மேலும் மேலை நாடுகளைப் போல இங்கு பன்றி வளர்ப்பு ஒரு மிகப்பெரிய தொழிலாக இல்லை. இதனால் விலங்குகளுக்கான நோய் தடுப்பு மருந்துகளை உற்பத்தி செய்யும் ராணிப்பேட்டை ஐ.வி.பி.எம்., அரசு நிறுவனம், பன்றிகளுக்கான தடுப்பூசியை தேவையின்மை கருதி உற்பத்தி செய்யவில்லை.

பன்றிக் காய்ச்சல் பரவாமல் தடுக்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள்:

1. பன்றிக் காய்ச்சல் நோய் பாதிப்பு இருக்கும் நாடுகளுக்கு செல்வதைத் தவிர்க்க வேண்டும்.

2. வெளிநாடுகளுக்கு சென்று திரும்புபவர்கள், தங்களுக்கு நோய் பாதிப்பு உள்ளதா, இல்லையா என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.

3. நோய் பாதிப்பு உள்ளவர்களை நேரடியாக தொட்டு பேசக்கூடாது. அவர்களிடமிருந்து விலகியிருப்பது நல்லது.

4. பாதிக்கப்பட்டவர் அருகில் இருக்க நேர்ந்தால் வாய், மூக்கை மூடிக் கொள்ள வேண்டும்.

5. கை, கால்களை நன்றாக சோப்பு போட்டு கழுவி சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.

6. மக்கள் வசிக்கும் பகுதியில் பன்றிகள் நடமாடாமல் தடுக்க உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

7. பன்றிகளை வளர்ப்பவர்கள், பராமரிப்பவர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.