Saturday, May 2, 2009

நானும் லக்கிலுக்கும் (ஒரு பிளாஷ்பேக்)


எனக்கு லக்கிலுக் (லயன் காமிக்ஸ் மூலம்) அறிமுகம் ஆகும் போது எட்டு வயது. அநேகமாக லக்கிலுக்கின் அனைத்து தமிழ் காமிக்ஸ்யையும் படித்து விட்டேன். எனது மைத்துனர் ஒருவர் (வயது 35) ஒரு பீரோ நிறைய லயன், முத்து, திகில், ஜுனியர் காமிக்ஸ் என்று குவித்து வைத்திருக்கிறார். போனால் போகிறது என்று ஒன்றிரண்டு ராணி காமிக்ஸ் அவற்றுள் அடக்கம். அவர் வெளியில் போகும் போது அவர் எங்கே பீரோவின் சாவியை ஒளித்து வைத்தாலும் அதனை எடுத்து காமிக்ஸை படிப்பதில் ஒரு சுகம்.


டால்டன் பிரதர்ஸ், ஜாலி ஜம்பர் என்று லக்கிலுக்கின் காமிக்ஸில் வரும் கதாபாத்திரங்களின் பெயரையே பெரும் பாலும் எங்கள் தெரு நாய்க்கு சூட்டி மகிழ்ந்தேன். நான் எழுத்தாளர் ஆனால் லக்கி லுக்கின் பெயரை தான் பயன்படுத்த வேண்டும் என்றிருந்தேன். ஆனால் ஒருவர் முந்திக் கொண்டார். சரி தொலைகிறது என்றும் விட்டு விட்டேன்.

இன்று சென்னையில் லயன் காமிக்ஸ் கிடைப்பது அரிதாகி விட்டது. இருந்தாலும் ஒரு கடையை பழக்கம் பிடித்து விட்டேன். அவரின் தயவில் மூன்று மாதங்களுக்கு ஒரு முறை படித்து வருகிறேன். எனது நீண்ட நாள் ஆசைகளில் ஒன்று சிவகாசி போய் லயன் காமிக்ஸின் ஆசியரியர் விஜயனைச் சந்தித்து இருக்கிற காமிக்ஸை அனைத்தையும் அள்ளிவிட்டு வர வேண்டும் என்ற ஆசை உண்டு. காமிக்ஸ் படித்த பின்னர் தான் எனக்கு எழுத்தார்வமும், படிப்பார்வமும் அதிகரித்தது. தமிழில் காமிக்ஸ் படித்து படித்து இன்று சென்னைiயில் என்னதான் இங்கிலிஸ் காமிக்ஸ் சுலபமாக கிடைத்தாலும் வாங்கிப் படிக்க மனசு வரவே இல்லை. (பின்னே எல்லாம் காந்தி நோட்டால்ல கேட்கிறான்) இரத்தப்படலம் இப்போது ஒரு தொகுப்பாக வருவதாக அறிகிறேன். இன்னும் கையில் கிடைத்த பாடில்லை.


சுரி லக்கிலுக்கைப் பற்றி எழுதும் நமது பிரபல வலைப்பதிவர் லக்கியைப் பற்றியும் கொஞ்சம் எழுதவில்லை என்றால் எனது வலைபூவிற்கு வந்து விமர்சனம் பதிய மாட்டார்.





நான் சொன்ன வலை பதிவர் சந்திப்பு

அது நான் சென்னை வந்த மூன்று ஆண்டுகளுக்கு நிகழ்ந்தது. அன்று தான் முதலாவது வலைப் பதிவர் சந்திப்பு பால பாரதியின் ஒருங்கிணைப்பில் கிழக்குப் பதிப்பகம் கட்டிடத்தின் எதிரே நடைபெற்றது. பாலாவும் எனது ஊர் காரர் தான். அன்று வலை பதிவர் சந்திப்பில் கலந்து கொண்டவர்களிலேயே மிகச் சிறிய வயது பையன் நானாக தான் இருந்தேன். அதே கிழக்குப் பதிப்பகத்தில் இன்று தனது புத்தகங்களை வெளியிடுவார் என்று யாரும் எதிர்பார்க்க வில்லை. லக்கி சமீபத்தில் எழுதிய விளம்பர உலகம் நான் சமீபத்தில் வாசித்த புத்தகங்களில் ஒன்று. இன்று விஸ்காம் படிக்கும் என்னைப் போன்ற மாணவர்களுக்கு இது இது ஒரு வரப்பிரசாதம். வரப்பிரசாதம் என்று நான் கூறியது கொஞ்சம் ஒவர் என்று எல்லாம் யாரும் பின்னுட்டம் இட வேண்டாம். காரணம் என்னவென்றால் விஸ்காம் படிக்கும் தமிழ் மாணவர்களுக்கு விளம்பர உலகத்தை அறிமுகம் செய்ய தமிழில் உருப்படியாக ஒரு புத்தகமும் கிடையாது. லக்கியின் பணி தொடர வேண்டும்.

லக்கியை பார்த்தால் மரைக்காயர் சொன்னதாக சொல்லுங்கள் அடிக்கடி 13 போக வேண்டாம் என்று.