Sunday, May 3, 2009

தயாநிதி வெற்றிக்கு அ.தி.மு.க உதவுகிறது தமுமுக தலைவர் அதிரடிப் பேட்டி


தி.மு.க கூட்டணியிலிருந்து வெளியேறியுள்ள மனிதநேய மக்கள் கட்சி, தேர்தலில் போட்டியிடுகிறது. மத்திய சென்னையில் ஹைதர் அலி. மயிலாடுதுறையில் ஜவாஹிருல்லாஹ் என்று அக்கட்சியின் முக்கியத் தலைவர்கள் களத்தில் நிற்கின்றனர். இந்நிலையில் நாம் மனிதநேய மக்கள் கட்சித் த்லைவரும், மயிலாடுதுறை வேட்பாளருமான ஜவாஹிருல்லாஹ்வை ஓட்டு வேட்டையின் போது தமிழன் எக்ஸ்பிரஸுக்காகச் சந்தித்தோம். இதோ அவரது சிறப்புப் பேட்டி.


?. அரசியலுக்குப் போகமாட்டோம் என ஆரம்பத்தில் சொன்ன தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் இப்போது அரசியல் கட்சியாக அவதாரம் எடுத்து தேர்தலில் குதித்துள்ளதே?


1995ல் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் தொடங்கப்பட்டது. 1996 சட்டமன்றத் தேர்தல் முதல், தொடர்ந்து பெரும்பாலும் தி.மு.க கூட்டணியையே ஆதரித்துள்ளோம். அதே நேரத்தில் தேர்தல் தொடர்பான அனைத்து நடவடிக்கைகளிலும் (வேட்பாளர்களை நிறுத்துவதைத் தவிர) ஈடுபட்டுள்ளோம்.சுற்றுச்சூழல் பாதிப்பு, மனித உரிமை மீறல், உலக மயமாக்கலின் வீபரீதம் தொடர்பான மக்கள் பிரச்சினைகளை அரசியல் களத்தில் யாரும் பேசுவது இல்லை என்பது யாதர்த்த உண்மை. இன்றைக்கு அரசியல் என்பது வணிக மயமாக்கப்பட்டுள்ளது. தேர்தலில் செய்யக் கூடிய முதலீட்டை வெற்றி பெற்ற பிறகு அறுவடை செய்ய வேண்டும் என்பது தான் சராசரி அரசியல்வாதியின் மனப்போக்காக உள்ளது. இந்நிலையை மாற்றி தூய்மையான அரசியலில் உண்மையான மக்கள் சேவகர்களாகச் செயல்படவே நாங்கள் அரசியலுக்கு வந்தோம்.


?. ரங்கநாத் மிஸ்ரா கமிஷன் அறிக்கையின் மீது மத்திய அரசு என்ன எடுத்திருக்கிறது?


2004 நாடாளுமன்றத் தேர்தலில் அறிக்கையில் காங்கிரஸ், தி.மு.க கட்சிகள், 'முஸ்லிம்களுக்கு கல்வி வேலை வாய்ப்பில் அகில இந்திய அளவில் இடஒதுக்கீடு அளிக்கப்படும்' என்று கூறினார்கள். நீதிபதி ரங்கநாத் மிஸ்ரா ஆணையம் சிறுபான்மை மக்களுக்கு இந்திய அளவில் 15 சதவீத இடஒதுக்கீடு எனவும், அதில் முஸ்லிம்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு எனவும் பரிந்துûரை செய்துள்ளது. இந்த அறிக்கை 22.05.2007ல் பிரதமர் மன்மோகன் சிங்கிடம் அளிக்கப்பட்டது. ஆனால் இந்த அறிக்கை பற்றி நாடாளுமன்றத்தில் விவாதத்திற்குவிட காங்கிரஸ் தலைமயிலான அரசு தவறிவிட்டது. பலமுறை நாங்கள் கேட்டும், மத்திய அரசை இந்த விஷயத்திற்கு தி.மு.கவும் நிர்பந்திக்க மறுத்து விட்டது. ஆகவே வரும் தேர்தலில் தி.மு.க காங்கிரஸ் கூட்டணிக்கு நல்ல பாடம் கிடைக்கும்.


?. பாபர் மசூதி இடிப்பு பிரச்சினையில் காங்கிரஸுக்கு சம்பந்தம் உள்ளது என லாலு பிரசாத் யாதவ் இப்போது கூறியுள்ளாரே?


பாபர் மசூதி இடிக்கப்பட்டபோது பிரதமராக இருந்த நரசிம்மராவ் அன்று தொலைக்காட்சியில் உரையாற்றியபோது, 'இடித்த பள்ளிவாசல் அதே இடத்தில் கட்டித் தரப்படும்' என்று வாக்குறுதி இன்றுவரை நிறைவேற்றித் தரப்படவில்லை. பாபர் மசூதி இடிப்பு தொடர்பாக நீதிபதி எம்.எஸ். லிபர்கான் தலைமையில் ஒரு ஆணையம் அமைத்து, 16 ஆண்டுகள் விசாரணை மேற்கொள்ளப் பட்டுள்ளது. அந்த ஆணையத்தின் பணி முடிந்த பின்னும், விசாரணை அறிக்கை வெளியிடக் கூட காங்கிரஸ் தலைமையிலான அரசுக்கு அக்கறை இல்லை. அந்த துரோக செயலைத்தான் இப்போது லாலு பிரசாத் தோலுரித்துக் காட்டியுள்ளார்.


?. தி.மு.க., அ.தி.மு.க., கட்சி வேட்பாளர்களில் முஸ்லிம்களுக்கு முக்கியத்துவம் தரப்பட்டுள்ளதா?


தி.மு.கவும், அ.தி.மு.கவும் இந்த நாடாளுமன்றத் தேர்தலில் ஒரே மாதிரியாகவே நடக்கின்றன. 21 வேட்பாளர்கள் இடம்பெற்ற தி.மு.கவின் வேட்பாளர் பட்டியலில் ஒருவர் கூட முஸ்லிம் இல்லை. தி.மு.க அணியில் இடம் பெற்ற முஸ்லிம் லீக் தலைவர் காதர் மொய்தீன், வேலூர் தொகுதியில் ஏணிச் சின்னத்தில் போட்டியிடப் போவதாகச் சொன்னார். ஆனால் சில நாட்களில் தி.மு.கவின் சின்னம் ஆனது. அ.தி.மு.கவின் 23 வேட்பாளர்களில் ஒருவர் கூட முஸ்லிம் இல்லை. சென்னையில் மனிதநேய மக்கள் கட்சி சார்பில் த.மு.மு.க பொதுச் செயலாளர் ஹைதர் அலி போட்டியிடுவார் என்று அறிவித்தவுடன், தயாநிதி மாறனுக்கு உதவி செய்ய ஒரு முஸ்லிம் வேட்பாளரை அறிவித்துள்ளது அக்கட்சி. இதெல்லாம் எங்களுக்கு தேர்தலின் தொடக்கத்தில் கிடைத்த ஒரு வெற்றிதான்.


?. இந்திய அளவில் முஸ்லிம் மற்றும் சிறுபான்மையினர் எழுச்சி எப்படி உள்ளது?


காங்கிரஸிற்கு எதிர்ப்பு உள்ள அஸ்ஸாம், மேற்கு வங்காளம், பீஹார், ராஜஸ்தான், உத்திர பிரதேசம், மஹாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் 'ஐக்கிய ஜனநாய முன்னணி' என்று கூட்டணி அமைத்து காங்கிரஸை எதிர்த்துக் களம் கண்டுள்ளார்கள். ஐக்கிய முற்போக்குக் கூட்டணியரசு முஸ்லிம் மற்றும் சிறுபான்மையினருக்கு எதிராகச் செயல்பட்டது என்ற கோபம் இம்மக்களிடம் பொதுவாக நிலவுகிறது. உதாரணமாக ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் குறைந்த பட்ச செயல்திட்டதில், 'பாலஸ்தீன மக்களை அன்றாடம் கொன்று குவித்து வரும் இஸ்ரேலுடன் உறவைப் பலப்டுத்தி, இஸ்ரேலின் உளவு செயற்கைக் கோளான டெஸ்காரை ஸ்ரீஹரி கோட்டாவில் இருந்து இந்தியா ஏவி உள்ளது. இது போன்ற பல செயல்பாடுகளைச் சொல்லாம்.2004 தேர்தல் அறிக்கையில் கொடுத்த, தலித் கிறிஸ்தவர்களுக்கு இடஒதுக்கீடு தருவோம்' என்ற உறுதியை ஐந்து ஆண்டுகால ஆட்சியில் நிறைவேற்றத் தவறியது காங்கிரஸ். அதுமட்டுமின்றி 2009 தேர்தல் அறிக்கையில் கூட தலித் கிறிஸ்தவர்கள் இட ஒதுக்கீடு தொடர்பாக ஒருவரிகூட இல்லை. எனவே முஸ்லிம் உள்ளிட்ட சிறுபான்மை மக்கள் காங்கிரஸுக்கு எதிரன சூழலிலேயே உள்ளனர்.


?. ''மகாமகத் திருவிழாவ தேசியத் திருவிழாவாக அறிவிப்பீர்களா? என்று செய்தியாளர்கள் கேட்டபோது மணிசங்கர் ஐயர், ''நான் நாஸ்திகன், என்னிடம் யாரும் இக்கோரிக்கையை வைக்கவில்லை'' என்றார். மயிலாடுதுறை தொகுதியில் நீங்கள் தேர்வானால் இந்துக்களின் இந்தக் கோரிக்கையை ஏற்பீர்களா?


காங்கிரஸ் சார்பாகப் போட்டியிடும் மத்திய அமைச்சர் மணிசங்கர் ஐயர், மயிலாடுதுறையை துபாய் ஆக்குவேன்' என்றார். ஆனால் அவர் மூன்று முறை வெற்றி வெற்றும் எதுவும் செய்யவில்லை. இறால் பண்ணைகளைக் கொண்டு வந்து விவசாயத்தைப் பாழடித்தார். அகல ரயில் பாதை திட்டத்தை முடித்தாரா என்றால் அதையும் செய்யவில்ல. கொள்ளிடம் ஆற்று அணக்கரை பாலம் சிதிலமடைந்து, சென்னை செல்லும் மக்கள் ஊரைச் சுற்றி கூடுதல் செலவில் செல்ல வேண்டியுள்ளது. அந்தப் பாலத்தைப் பற்றியாவது கவலைப் பட்டாரா என்றால் அதுவும் இல்லை. இப்படிப்பட்ட பல பிரச்சினைகளுக்கு இடையே நான் தேர்வு ஆனால், அனைத்து தரப்பு மக்களுக்க்கும் பயன்படக் கூடியலிஅனைவரின் அபிலாஷைகளையும் பூர்த்தி செய்யக் கூடிய பணிகளில் அதிக அக்கறை செலுத்துவேன்.


நன்றி தமிழன் எக்ஸிபிரஸ் 07.05.2009