Wednesday, June 3, 2009

கருணாநிதியின் கவலைகளும் பிரபாகரன் பற்றிய கவலைகளும்

காட்சிகளில் டெல்லியில் தள்ளு வண்டியில் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியை வைத்து தள்ளிக் கொண்டு சென்றபடி அவருடைய குடும்ப உறுப்பினர்களும் குடும்ப விஸ்வாசிகளும் வலம் வந்த காட்சிகளைப் பார்த்தபோது பத்தாண்டுகளுக்கு முன்னர் ஒரு சுதந்திரப் போராட்ட வீரரின் வாழ்க்கை அனுபவத்தை நான் சிறுகதையாக எழுதியிருந்தது ஞாபகத்துக்கு வந்தது.ஒரு டி.வி. நிகழ்ச்சிக்காக அந்த விடுதலை வீரரை நான் சென்னைக்கு வரக் கேட்டிருந்தேன். . அவருக்கு வயது எண்பதுக்கு மேல். உடல் தளர்ச்சி பெரிதாக இல்லாவிட்டாலும் கடும் மன தளர்ச்சியில் இருந்தார். சென்னைக்கு அழைத்து வந்தவர்கள் அவ்ருடைய பிள்ளையும் பேரனும். நிகழ்ச்சிப் பதிவு முடியும்வரை என் வீட்டில் தங்கியிருந்தார்கள். எல்லாம் முடிந்து ஊருக்குத் திரும்பும் தினத்தன்று ரயிலுக்குப் புறப்படுவதற்கு முன்னால் அவர் என் அறைக்கு பேரனுடன் வந்தார். என்னிடம் ஒரு உதவி வேண்டுமென்று தயங்கித் தயங்கிச் சொன்னார். என்னவென்று கேட்டேன் பேரனுக்கு சினிமாவில் சேர ஆசை. எப்படியாவது கமல்ஹாசனிடம் சொல்லி சேர்த்துவிடவேண்டுமென்று கேட்டார் ஆங்கிலேய ஆட்சியில் தேசத்துக்காகஅடி உதை அவமானங்களை சந்தித்திருந்த அந்த விடுதலை வீரர். ஏற்கனவே பல முறை பேரன் சென்னைக்கு வந்து முயற்சித்த கதையையும் சொன்னார். விடுதலை வீரருடன் ரயிலில் வந்தால் உடன் வரும் உதவியாளருக்கு டிக்கட் இலவசம் என்பது அரசு அளித்திருக்கும் சலுகை. எனவே அடிக்கடி இந்த விடுதலை வீரரை பேரன் சென்னைக்கு அழைத்து வந்து நாள் முழுக்க ரயில்வே நிலையத்திலேயே உட்காரவிட்டுவிட்டு, கோடம்பாக்கத்தில் வாய்ப்பு கேட்கப் போய்விடுவான். இரவு ரயிலில் ஊர் திரும்பும் வரை ரயிலடியில் விடுதலை வீரர் கிடக்க வேண்டியதுதான்.தள்ளு வண்டிக் கலைஞரை டெல்லிக் காட்சிகளை டி.வியில் பார்த்தபோது ஏனோ இந்த உண்மைக் கதை நினைவுக்கு வந்தது. ஒரு காலத்தில் மொழிக்காக, தமிழ் மக்களின் உரிமைக்காக, ரயில் தண்டவாளத்தில் தலை வைத்து டெல்லிக்கு எதிராகப் போராடிய இளைஞர், இன்று 84 வது வயதில் மகனுக்கும் மகளுக்கும் பேரனுக்கும் அமைச்சர் பதவி பெற்றுத் தருவதற்காக தள்ளு வண்டியில் வைத்து அலைக்கழிக்கப்படுகிறார். விடுதலை வீரருக்கும் இவருக்கும் ஒரே வித்யாசம், இப்படி அலைவது இவருக்கும் பிடித்திருக்கிறது என்பதுதான்.தி.மு.க என்பது திருக்குவளை மு.கருணாநிதி லிமிடெட் கம்பெனியாகிப் பல காலம் ஆயிற்று. கட்சி என்கிற கம்பெனியின் கண்ட்ரோலிங் ஷேர்ஸ் எல்லாம் குடும்பத்திடமே இருக்கின்றன. குடும்பத்தின் அடுத்தடுத்த தலைமுறைகள் வரிசையாக நிர்வாகப் பொறுப்புகளுக்கு வந்துகொண்டிருக்கிறார்கள். அதை ஒழுங்காக முடித்துத் தருவதற்காக ஓய்வு பெறும் வயதைத் தாண்டியபிறகும் போர்ட் சேர்மன் பதவியில் கலைஞரை தொடரவைத்துக் கொண்டிருக்கிறார்கள்.டி.வியில் பார்த்த டெல்லிக் காட்சிகளில் தள்ளு வண்டி ஊர்வலத்தில் பின்னால் போகிற பிரமுகர்களில் ஒரு பலியாடு மாதிரி முகத்தைப் பார்த்தேன். தெரிந்த முகமாயிருந்தது. வயதாகிவிட்டதால் கொஞ்சம் பின் வழுக்கையும், முன்புறம் வயதை மீறிய கருந்தாடியுமாக - திருச்சி சிவா! தி.மு.கவின் ராஜய சபை உறுப்பினர். ஸ்டாலினுடன் இளைஞர் தி.மு.க உதவி தளபதிகளில் ஒருவராகத் துடிப்புடன் செயல்பட்டு விஸ்வாசமாக சுமார் 30 வருடங்களுக்கு மேல் கட்சியில் இருக்கிறவர். புத்தகம் படிக்கிற ப்ழக்கமும், எழுதுகிற பழக்கமும் உடைய கண்ணியமான மனிதர். கட்சி அவருடைய விஸ்வாசத்துக்கு அளித்த உச்சமான பரிசு எம்.பி.பதவி மட்டும்தான். இந்த முறை அவருக்கு ஓர் இணை மந்திரி பதவியாவது தருவார்கள் என்று நினைத்தேன். ம்ஹூம். எம்.ஜி.ஆர் விஸ்வாசியாக இருந்து கல்வித் தந்தையாக மாறி அண்மையில் தி.மு.கவில் இனைந்து எம்.பியான கோடீஸ்வரர் ஜெகத்ரட்சகனுக்கெல்லாம் மந்திரி பதவி கொடுத்த பிறகு மீதி பதவி எதுவும் இல்லையே. மன்மோகன் சிங் குறைந்தது தி.மு.கவுக்கு பத்து இணை அமைச்சர் பதவிகளையாவது கொடுத்திருந்தால், சிவா மாதிரி அரசியல் அசடுகளுக்கும் வாய்ப்பு கொடுத்திருப்பார்களோ என்னவோ..மூத்த கட்சிக்காரரான டி.ஆர்.பாலுவை ஓரங்கட்டிவிட்டதாக பத்திரிகைகள் எழுதுகின்றன. இதில் ஒன்றும் வியப்பு இல்லை. பண்ணையார் வீடுகளில் எப்போதும் துடிப்பான புது இளம் கணக்குப் பிள்ளைகள் வந்துவிட்டால், வயசான பழைய கணக்குப் பிள்ளைகள் தாமாகவே குறிப்பறிந்து ஒதுங்கிக் கொள்வதுதான் மரபு. இன்னும் கொஞ்சம் கவுரமாக பாலுவுக்கு ஏதாவது மாநில ஆளுநர் பதவி வாங்கிக் கொடுத்து ரிட்டையர் ஆக்கியிருக்கலாம்.வாசிப்புப் பழக்கம், எழுதும் ஆற்றல், ஆங்கில அறிவு உடையவர்களை தேர்ந்தெடுத்து டெல்லிக்கு எம்..பிகளாக அனுப்பி தங்கள் கொள்கைகளுக்காக திறமையாக வாதாடக் கூடிய நபர்களை - அண்ணா, சம்பத், நாஞ்சில் மனோகரன் , இரா செழியன்,முரசொலி மாறன், டாக்டர் கலாநிதி, வைகோ போன்றோரை -- அனுப்பும் கட்சியாக இருந்த திமு.க இன்று எப்படிப்பட்டவர்களை அனுப்புகிறது ? யாரெல்லாம் அமைச்சர் ஆக்கப்படுகிறார்கள் ? எப்படி இருந்த தி.மு.க இப்படி ஆகிவிட்டது ? இன்னும் அடுத்த பத்தாண்டுகளில் என்னவெல்லாம் ஆகப்போகிறதோ ?நீ ஒன்றும் எங்களைப் பற்றிக் கவலைப்பட வேண்டாம் என்று ஆவேசப்பட வேண்டாம். நீங்களேயாவது உங்களைப் பற்றிக் கவலைப்படுங்கள். என் கவலையெல்லாம் உங்களின் இலவச மயக்கங்களில் சிக்கியிருக்கும் மக்களின் கதியைப் பற்றித்தான்.-------------------------------------------------
விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் உயிரோடு இருக்கிறாரா இல்லையா என்று சர்ச்சைகள் தொடர்கின்றன. ப்லரும் என்னிடமும் தொலைபேசியில் கேட்கிறார்கள். எந்த உண்மையை நம்புவதென்று எனக்கும் தெரியவில்லை.
பிரபாகரன் இருக்கிறார் என்றால் இனி என்ன ஆகும் ? பிரபாகரன் இல்லை என்றால் இனி என்ன ஆகும் ? இந்த இரு நிலைகளையும் கொஞ்சம் யோசித்துப் பார்ப்போம்.பிரபாகரன் இருக்கிறார் என்றால், அவரை எவ்வளவு சீக்கிரமாக நெடுமாறனோ வைகோவோ சந்தித்து பேட்டி எடுத்து வெள்யிடுகிறார்களோ அவ்வளவுக்கவ்வளவு நல்லது.
பிரபாகரன் தன்னைத்தானே மிகத் தீவிரமாக சுயவிமர்சனம் செய்துகொள்ள வேண்டிய நேரம் இதுதான். உலகத்தின் மிகத் திறமை வாய்ந்த ராணுவ தளபதிகள் வரிசையில் இடம் பெறக்கூடிய தனக்கு இப்போது பின்னடைவு ஏற்பட்டதற்கு என்ன காரணம் என்பதை அவர் சிந்திக்க வேண்டும். ராணுவ ரீதியான தவறுகளை விட, அரசியல் தவறுகள்தான் இந்த நிலைக்குக் காரணம் என்பதை அவர் புரிந்துகொள்ளவேண்டும்.இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்னால் இந்திய அரசு போராளிகளுக்கு ஆயுதப்பயிற்சி கொடுத்த போது இருந்த உலக அரசியல் இன்று இல்லை என்பதை புரிந்துகொள்ள வேண்டும். சோவியத் யூனியன் இல்லை. அமெரிக்கா ஒற்றை வல்லரசானது. அல்-கொய்தா தாக்குதல்களுக்குப் பிறகு அமெரிக்காவும் மேலை நாடுகளும் புலிகளை ஆதரித்ததை நிறுத்திவிட்டன. இந்தியா எப்போதுமே தனி ஈழத்தை ஆதரித்ததில்லை என்பதுவேறு எவரையும் விட பிரபாகரனுக்கு நன்றாகவே தெரியும்.நானும் பிரபாகரனும் ஒரே ஆண்டில் பிறந்தவர்கள் ஒரே வயதினர். 1983 முதல் 1992 வரை நானும் இலங்கையில் இருக்கும் தமிழர்களுக்கு தனி ஈழம் ஒன்றுதான் தீர்வு என்று தீவிரமாக நம்பினேன். ஆதரித்து எழுத்திலும் பேச்சிலும் பிரசாரம் செய்தேன். இப்போது என் கருத்து மாறிவிட்டது.இன்று உலகில் எங்கேயும் எவரும் பிரிந்து போவதற்குப் போராடுவதை விட, சேர்ந்து வாழ்வதற்கான வழிமுறைகளை யோசிப்பதும் உருவாக்குவதும்தான் சிறந்த தீர்வு என்று நம்புகிறேன். ஆயுதப் போராளியான நெல்சன் மண்டேலாவை தன் ரோல் மாடலாக பிரபாகரன் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.பிரபாகரன் உயிரோடு இருப்பாரானால், மறுபடியும் ஆயுதப் போராட்டத்தை எப்படி வலுப்படுத்துவது என்ற யோசனைக்கு பதில், அரசியல் தீர்வு பற்றி யோசிக்கத் தொடங்க வேண்டும். மறுபடியும் ஆயுதப்போராட்டம் ஒரு ரொமாண்டிக் கனவாக இருக்க முடியுமே தவிர, இன்னும் பல தலைமுறை ஈழத்தமிழர்களை யுத்தத்தில் வன்முறையில் பலி கொடுபதில்தான் திரும்பவும் முடியும்.இலங்கையில் ப்கிரங்க அரசியல் கட்சியாக புலிகள் தம்மை அறிவித்துக் கொண்டு செயல்படத்தொடங்குவதற்கான வழிகளை பிரபாகரன் யோசிக்க வேண்டும். அதற்கான ஆதரவை உலக நாடுகளிடம் திரட்டும் வேலையில் உலகெங்கும் இருக்கும் ஈழத்தமிழ் ஆதரவாளர்களை ஈடுபடுத்த வேண்டும். இப்படிப்பட்ட மாற்றத்துக்கு இந்தியாவில் பெரும் ஆதரவு கிட்டும். இந்திய அரசும் இதை ஆதரிக்க வேண்டும் என்ற நிர்ப்பந்தத்தை எளிதில் ஏற்படுத்த முடியும்.ஈழ மாநிலத்தின் முதலமைச்சராக பிரபாகரனும், எதிர்க்கட்சித்தலைவராக வரதராஜப்பெருமாளோ, டக்ளஸ் தேவானந்தாவோ, கருணாநிதி-ஜெயலலிதா போல அல்லாமல் இன்னும் அதிகத் தரத்துடன் அரசியல் செய்யும் ஜனநாயக அமைப்பை பிரபாகரன் நினைத்தால் இன்றைய சூழலில் உருவாக்கிக் காட்ட முடியும். ராணுவ வீரன் பிரபாகரனுக்கு ஓய்வு கொடுத்துவிட்டு அரசியல்வாதி பிரபாகரனாக தன்னை அதற்கு அவர் வடிவமைத்துக் கொள்ள வேண்டும். இதுதான் என் விருப்பம். மறுபடியும் ஈழத்தமிழர்களை யுத்தம் நோக்கி அழைத்துச் செல்லும் எவரும் உண்மையில் முழுமையான தமிழ் இன ஒழிப்பில்தான் அதைக் கொண்டு போய் முடிப்பார்கள்.பிரபாகரன் இறந்திருந்தால் ?அரசியல் தலைமைக்கு ராணுவ ஆற்றல் கட்டுப்பட்டால்தான் அரசு அமையும்; ராணுவ தலைமைக்கு அரசியல் அடி பணிந்தால், பாகிஸ்தானைப் போன்ற சீரழிவும் குழப்பமும்தான் ஏற்படும் என்ற நிரந்தரமான அரசியல் விதியைப் புறக்கணித்ததால் பலியானவர் பிரபாகரன் என்ற வருத்தத்துடன் அடுத்தது என்ன என்று யோசிப்போம்.இந்தியாவின் பொறுபும் இந்தியாவில் உள்ள நம்முடைய பொறுப்பும் உலக நாடுகளின் பொறுப்பும் இன்னும் கூடுதலாகின்றன. ரஜபக்‌ஷே அரசை குறைந்தபட்சம் 13வது சட்டத்திருத்த் ரீதியான் சம உரிமைகளை உடனடியாக நிறைவேற்றக் கட்டாயப்படுத்துவது மிக முக்கியமானதாகிறது. பல கட்சி ஜனநாயக அமைப்பை கிழக்கிலங்கையில் நிலை நிறுத்த உழைக்க வேண்டியிருக்கிறது.இதைச் செய்யாவிட்டால் ஈழத்தமிழர்கள் மறுபடியும் ஆயுதபோராட்டம் என்ற விஷச் சுழலில் போய் சிக்கி மறுபடியும் தற்காலிக வெற்றிகளையும் தொடர்ந்த அழிவுகளையும் சந்திக்கும் அவலம் ஏற்படும்.பிரபாகரன் இறந்திருந்தாலும் சரி, உயிரோடே இருக்கிறார் என்றாலும் சரி, உடனடியாக நம் அக்கறைக்குரிய வேலை, யுத்தத்தில் பாதிக்கப்பட்ட தமிழர்கள் அனைவரும் சகஜ நிலைக்கு 6 மாதத்துக்குள் திரும்ப ஏற்பாடு செய்வேன் என்று ராஜ பக்ஷே ஐ.நாவிடம் சொல்லியிருப்பதை தினம் தினம் கண்காணித்து செயல்படுத்த எல்லா நிர்ப்பந்தங்களையும் ஏற்படுத்துவ்துதான். அதிக பட்சம் இனும் 15 நாட்களுக்குள் உலகத் தொண்டு நிறுவனங்கள் அனைத்தையும் நிவாரணப் பணி செய்ய அனுமதிக்கும்படி ராஜப்க்‌ஷே அரசை வலியுறுத்த வேண்டும். சிதைந்த நகரங்களை ஊர்களை கிராமங்களை மறுபடியும் எழுப்பும் வேலையை விரைவுபடுத்த வேண்டும் .


இவற்றைப் பற்றியெல்லாம் பேசாமல், மர்மக்கதை போல சர்ச்சைகளில் போய் சிக்குவது கூட அசல் பிரச்னையிலிருந்து திசை திரும்பும் வேலையாகிவிடும்..இந்த வாரப் பூச்செண்டு:வறுமை, நோய் போன்றவற்றை மீறி அதிக மதிப்பெண்கள் பெற்று சாதனைகள் செய்திருக்கும் பள்ளி இறுதியாண்டு, பிளஸ் டூ மாணவ சாதனையாளர்கள் அனைவருக்கும் இ.வா.பூச்செண்டு.இந்த வார நெகிழ்ச்சி:கனிமொழியின் ’தியாகம்.’