Wednesday, June 3, 2009

பசங்க: தமிழில் குழந்தைகள் சினிமாவுக்கான முதல் முயற்சி



Takeshi Miike என்ற ஜப்பானிய இயக்குனரின் Ichi the Killer என்ற படம் மேற்கத்திய பார்வையாளர்களுக்காகத் திரையிடப்பட்ட போது அவர்களின் கையில் Vomit bag என்று சொல்லி ஒரு பையையும் கூடவே கொடுத்தார்கள் என்பது செய்தி. அந்த அளவுக்கு குரூரமான ஒரு படம் இச்சி தெ கில்லர். தமிழில் இதுவரை வெளிவந்துள்ள குழந்தைகள் நடித்த படங்களைப் பார்த்தால் மேற்சொன்ன தகேஷி மீகேவே வாந்தி எடுத்து விடுவார் என்ற அளவுக்குத் தமிழ் சினிமா குழந்தைகளைச் சித்ரவதை செய்திருக்கிறது. இதுபற்றிப் பேசாமல் ‘பசங்க’ படத்தைப் பற்றி மட்டும் தனியாகப் பேச முடியாது என்பதால் முதலில் தமிழில் குழந்தைகள் நடித்துள்ள சில படங்களைப் பற்றிப் பார்ப்போம்.



முதலில் ஞாபகம் வருபவர், மணி ரத்னம். அவருடைய ‘கன்னத்தில் முத்தமிட்டால்’ படத்தில் வரும் அமுதா என்ற குழந்தை ஒரு ஈழப் போராளிப் பெண்ணால் கைவிடப் படுகிறாள். அந்தக் குழந்தையை தங்களுடைய குழந்தையாக எண்ணி வளர்க்கிறார்கள் ஒரு தம்பதி. ஒன்பது ஆண்டுகள் கழித்து, அந்தக் குழந்தையின் உண்மையான பெற்றோர் தாங்கள் இல்லை என்பதை அந்தத் தம்பதி குழந்தையிடம் தெரிவிக்கிறார்கள். இப்படி யாரும் தெரிவிக்க மாட்டார்கள் என்பதோ, இப்படித் தெரிவிப்பது, அல்லது, படத்தில் வருவது போல் அவ்வளவு குரூரமாகத் தெரிவிப்பதன் செயற்கைத் தன்மையோ இயக்குனருக்குத் தெரியவில்லை. படத்தில் அதற்குப் பின் வருவதுதான் பயங்கரம். இதை ஒரு Horror படம் என்று போட்டிருந்தால் நமக்குப் பிரச்சினையே இல்லை. ஒன்பது வயதில் ‘இவர்கள் தன்னுடைய உண்மையான பெற்றோர் இல்லை; வளர்த்தவர்கள்தான்’ என்று அவர்களிடமிருந்தே தெரிந்து கொள்ளும் அமுதா தன்னுடைய ‘உண்மையான’ பெற்றோரைத் தேடி இலங்கை செல்கிறாள். இப்படிப்பட்ட கொடூரமான கற்பனையையெல்லாம் Fetish ரகப் படங்களில் கூட நாம் பார்க்க முடியாது.
இந்தப் படத்தைப் பார்க்கும் போது எனக்கு Exorcist (1973) என்ற படமே மீண்டும் மீண்டும் ஞாபகம் வந்தது. அந்தப் படத்தில் ஒரு 12 வயதுச் சிறுமியை பேய் பிடித்து விடுகிறது. பிறகு அந்தச் சிறுமியின் உடம்பில் புகுந்த பேய் பண்ணும் அட்டகாசங்களும் அதி பயங்கரங்களும்தான் படம்.



குழந்தைகளின் பிரச்சினையை மையமாக வைத்து மணி ரத்னம் எடுத்த இன்னொரு படம், அஞ்சலி. ’கன்னத்தில் முத்தமிட்டால்’ அமுதா ஒரு டெரரிஸ்ட் என்றால் இதில் வரும் அஞ்சலி என்ற ஒன்றரை வயதுக் குழந்தை ஒரு பைத்தியம். அஞ்சலியாக நடித்த ஷாமிலி இதற்காக ஜனாதிபதி பரிசும் பெற்றாள்! இவளுடைய அக்காதான் அந்தக் காலத்தில் மிகப் பிரபலமாக இருந்து பெரிய மனிதர்களைப் போல் தத்துவ வசனங்களையெல்லாம் உதிர்த்துக் கொண்டிருந்த பேபி ஷாலினி. அஞ்சலி தவிர படத்தில் மேலும் ஒரு பத்து இருபது குழந்தைகள் வருகிறார்கள். அஞ்சலி பைத்தியம் என்றால், இந்தக் குழந்தைகள் அனைவரும் கிரிமினல்கள்!



இந்தியா முழுவதும் பாராட்டப்படும் மணி ரத்னத்தின் குழந்தைகளுக்கே இந்தக் கதி என்றால், சாமான்யத் தமிழ் சினிமா இயக்குனர்களைப் பற்றிச் சொல்லவும் வேண்டுமா?



குழந்தைகள் இடம் பெறும் படங்களிலெல்லாம் அந்தக் குழந்தைகள் 80 வயதுக் கிழவிகள் பேசுவது போலவே பேசுவார்கள். இப்படிப் பேசியே புகழ் பெற்ற குழந்தை நட்சத்திரங்களான பேபி ஷகிலா, குட்டி பத்மினி, ஸ்ரீதேவி, கமல்ஹாசன் போன்றவர்களைப் பற்றி எழுத வேண்டுமென்றால் ஆளுக்கு ஒரு ஆய்வுக் கட்டுரை எழுத வேண்டியிருக்கும். உதாரணமாக, ’குழந்தையும் தெய்வமும்’ படத்தில் கதாநாயகனுக்கு இணையாக வசனம் பேசுவார் குட்டி பத்மினி. எம்ஜியார், சிவாஜி படங்களில் நடித்த பேபி ஷகிலாவுக்கு எம்ஜியார் படத்தில் நடிக்கும் போது மட்டும் இன்னொரு பிரச்சினை. எம்ஜியார் குழந்தைகளைத் தூக்கிப் போட்டுத்தான் கொஞ்சுவார். அவருக்கோ அவ்வளவாக நடிக்க வராது. அதனால் ஆறு ஏழு டேக் வாங்கினால், குழந்தையை ஆறு ஏழு முறை தூக்கிப் போட வேண்டும். என்ன பாவம் செய்ததோ அந்தக் குழந்தை பேபி ஷகிலா!



குழந்தைகள் பெரியவர்களைப் போலவும், தாத்தா பாட்டிகளைப் போலவும் பேசுவது போதாது என்று அதற்கும் மேலே ஒரு படி சென்று அவர்களை தெய்வங்களாகவும் ஆக்கியது தமிழ் சினிமா.



குழந்தை நட்சத்திரம் ஸ்ரீதேவிதான் அந்தக் காலத்தின் முருகன், கிருஷ்ணன் எல்லாம். கந்தன் கருணையில் அவர் முருகனாக வருவார். குழந்தைகளைப் பெரியவர்களைப் போல் நடிக்க வைப்பதே ஒரு வன்கொடுமை என்றால், அவர்களைத் தெய்வங்களாக நடிக்க வைப்பது அதைவிடக் கொடுமை.
இப்படியெல்லாம் குழந்தைகளை வதைத்துக் கொண்டிருந்த தமிழ் சினிமா சூழலின் பின்னணியில்தான் ’பசங்க’ என்ற குழந்தைகள் படம் வெளியாகியுள்ளது. விராச்சிலை என்ற கிராமம். அங்கே உள்ள அரசினர் பள்ளியில் படிக்கும் ஜீவா என்ற மாணவன். அந்தப் பள்ளிக்குப் புதிதாக வந்து சேரும் அன்பு. ஜீவாவுக்கும் அன்புவுக்கும் நடக்கும் மோதல். பொறாமை, திமிர், விரோத மனோபாவம் போன்ற தீய குணங்களைக் கொண்டவனாக ஜீவா. ஜீவாவின் அப்பாதான் அந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியர். அவர்தான் இந்தப் பசங்களின் வகுப்பு ஆசிரியரும் கூட. ஜீவாவின் தோழர்களான பக்கடா, குட்டி மணியும் கூட ஜீவாவைப் போன்றே கெட்ட குணங்களைக் கொண்டவர்களாக இருக்கிறார்கள்.



இந்த கோஷ்டிக்கு நேர் எதிராக அன்பும் பண்பும் கொண்ட புதிய மாணவன் அன்பு. அன்புவிடம் மிகுந்த சிநேகமாக இருக்கும் வகுப்புத் தோழி மனோன்மணி. இவள் ஜீவாவின் சொந்தக்காரி. ஜீவாவுக்கும் அன்புவுக்கும் இடையிலான சண்டை கடைசியில் சமாதானம் ஆகி படம் முடிவடைகிறது. இதுதான் படத்தின் கதை. வழக்கமான தமிழ் சினிமா கதைதான் என்றாலும் சொல்லப்பட்ட விதத்தில் சர்வதேசத் தரத்தை எட்டியிருக்கிறது.


http://www.charuonline.com/June2009/Pasanga1.html